அமெரிக்காவில் ஒரு வாரத்தில் மீண்டும் மற்றொரு சீக்கியர் மீது தாக்குதல்


அமெரிக்காவில் ஒரு வாரத்தில் மீண்டும் மற்றொரு சீக்கியர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 8 Aug 2018 6:56 AM GMT (Updated: 8 Aug 2018 6:56 AM GMT)

அமெரிக்காவில் ஒரு வாரத்தில் மீண்டும் மற்றொரு சீக்கியர் மீது அடையாளம் தெரியாத 2 நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

நியூயார்க்,

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் சீக்கியர் சாஹிப் சிங் நாட் (வயது 71).  இவர் மேன்டெகா பகுதியில் உள்ள சாலையில் கடந்த திங்கட்கிழமை தனியாக நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார்.  இந்த நிலையில் அவர் எதிரே 2 பேர் கருப்பு உடை அணிந்தபடி வந்துள்ளனர்.

சிங்கை கண்டதும் அவரை தடுத்து நிறுத்தி பேச்சு கொடுத்துள்ளனர்.  அவர்களிடம் பேசி விட்டு அங்கிருந்து சிங் செல்கிறார்.  தொடர்ந்து சிங்கை பின்தொடரும் அவர்கள் மீண்டும் பேச்சு கொடுக்கின்றனர்.  நீண்ட வாதத்திற்கு பின்னர் கருப்பு சட்டை அணிந்த ஒருவர் சிங்கின் வயிற்றில் காலால் உதைக்கிறார்.  இதில் சிங் சாலையில் விழுகிறார்.  அவரது தலைப்பாகையும் கீழே விழுகிறது.

சிங் எழுந்து நின்று தற்காத்து கொள்ள முயன்றபொழுது மீண்டும் அவரது வயிற்றில் உதைத்துள்ளார்.  இதில் கீழே விழுந்த அவரை நெருங்கிய அந்த நபர் முகத்தில் எச்சில் துப்புகிறார்.  சிங் சாலையில் விழுந்து கிடக்க 2 பேரும் நடந்து செல்கின்றனர்.

ஒரு சில வினாடிகளில் கருப்பு சட்டை அணிந்த நபர் மீண்டும் ஓடி வந்து சிங்கின் தலை அருகே 3 முறை காலால் உதைக்கிறார்.  அதன்பின் நடந்து செல்லும் அந்த நபர் திரும்பி சிங் மீது எச்சில் துப்புகிறார்.

இந்த வீடியோ காட்சி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.  கடந்த ஒரு வாரத்தில் சீக்கியர் மீது நடைபெறும் 2வது தாக்குதல் இதுவாகும்.

கடந்த ஜூலை 31ந்தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கேயெஸ் சாலையில் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டு இருந்த 50 வயது நிறைந்த சீக்கியர் சுர்ஜித் என்பவர் மீது அந்த வழியே வந்த 2 வெள்ளை இனத்தவர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தி உள்ளனர்.  தொடர்ந்து அவர்கள் உன்னை யாரும் இங்கே வரவேற்கவில்லை.  உன்னுடைய நாட்டிற்கு திரும்பி போ என்றும் கூச்சலிட்டு உள்ளனர்.

அதனுடன் சீக்கியரின் வாகனம் மீது பெயிண்ட் கொண்டு உன்னுடைய நாட்டிற்கு திரும்பி போ என்றும் அவர்கள் கருப்பு வண்ணத்தில் எழுதியுள்ளனர்.

உலக அளவில் 5வது இடத்தில் உள்ள பிரபலம் வாய்ந்த மதம் என்ற பெருமையை சீக்கிய மதம் பெற்றுள்ளது.  அமெரிக்காவில் 5 லட்சம் சீக்கியர்கள் வசிக்கின்றனர்.  2018ம் வருட தொடக்கத்தில் இருந்து, இங்கு வாரம்  ஒன்றிற்கு ஒரு சீக்கியர் தாக்கப்படுகிறார் என சீக்கியர்களுக்கான கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

Next Story