மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு


மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Aug 2018 10:45 PM GMT (Updated: 8 Aug 2018 6:41 PM GMT)

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டை நீதிபதி பதிவு செய்தார்.

கோலாலம்பூர்,

மலேசியாவில் 60 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த பரிசன் நேஷனல் கூட்டணி (பி.என்.), கடந்த மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து நஜிப் ரசாக் பிரதமர் பதவியை இழந்தார். உடனே அவர் மீதான ஊழல் புகார்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டது.

‘1 எம்.டி.பி.’ என்று அழைக்கப்படுகிற 1 மலேசிய அபிவிருத்தி வாரியத்தின் அங்கமான எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் நிதி 10.3 மில்லியன் டாலரை ( சுமார் ரூ.69 கோடி) தன் வங்கிக்கணக்குகளுக்கு மாற்றி ஊழலில் ஈடுபட்டார் என்பதுதான் நஜிப் ரசாக் மீது உள்ள முக்கிய குற்றச்சாட்டு. இந்த ஊழல் பணத்தை அவர் சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்து உள்ளதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அந்த வழக்கு, கோலாலம்பூர் ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நஜிப் ரசாக் மீது நீதிபதி, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளை வாசித்துக் காட்டி பதிவு செய்தார். அப்போது கோர்ட்டில் குற்றவாளிக்கூண்டில் அமைதியாக நின்ற நஜிப் ரசாக், பின்னர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து வந்த நீதிபதியின் சகோதரர், நஜிப் ரசாக் கட்சியில் முக்கிய பதவி வகித்தவர். எனவே அவர் இப்போது மாற்றப்பட்டு, புதிய நீதிபதி நியமிக்கப்பட்டு நேற்று விசாரணை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story