சவுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீச்சு ஒருவர் பலி; 11 பேர் படுகாயம்


சவுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீச்சு ஒருவர் பலி; 11 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 9 Aug 2018 11:15 PM GMT (Updated: 9 Aug 2018 8:08 PM GMT)

சவுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீச்சில் ஒருவர் பலியானார். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

துபாய்,

ஏமனில் அதிபர் அப்துரப்பு மன்சூர் ஹாதி ஆதரவு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015–ம் ஆண்டு, மார்ச் மாதம் 19–ந் தேதி முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

தலைநகர் சனா உள்ளிட்ட முக்கிய பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர்.

இந்தப் போரில் அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் களமிறங்கி, ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன. கடுமையான வான்தாக்குதல்களையும் நடத்தி வருகின்றன.

இதற்கு பழிவாங்கும் விதத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சமீப காலமாக சவுதி மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நேற்று முன்தினம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் தொழில் நகரமான ஜிஜானை குறிவைத்து ஏவுகணை வீச்சு நடத்தினார்கள்.

அந்த ஏவுகணையை சவுதியின் வான்பாதுகாப்பு சாதனம் வழிமறித்து அழித்தது. அந்த ஏவுகணை சிதறல்கள் குடியிருப்புகள் மீது விழுந்தன. இதில் ஒருவர் பலி ஆனார். 11 பேர் படுகாயம் அடைந்தனர். இதை சவுதி கூட்டுப்படையினர் ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.


Next Story