உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் நில நடுக்கம் + "||" + Earthquake again in Indonesia

இந்தோனேசியாவில் மீண்டும் நில நடுக்கம்

இந்தோனேசியாவில் மீண்டும் நில நடுக்கம்
இந்தோனேசியாவில் நேற்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. பீதியில் மக்கள் அழுது கொண்டே, வீதிக்கு ஓடி வந்தது பரிதாபமாக இருந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த நாடு, நெருப்பு வளையத்தில் அமைந்து இருப்பதுதான் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்து உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு பாலி, லாம்போக் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகளாக பதிவான அந்த நில நடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 319 ஆக உயர்ந்தது.

இதை அந்த நாட்டின் பாதுகாப்பு மந்திரி விராண்டோ உறுதி செய்தார்.

1,400 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுகின்றனர். 1 லட்சத்து 56 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து உள்ளனர். சில கிராமங்களில் 75 சதவீத வீடுகள் பெருத்த சேதம் அடைந்து உள்ளன.

இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை தேடும் பணி இன்னும் நீடித்து வருகிறது. சாலைகளை சீரமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. அதன்சேத விவரம் முழுமையாக இன்னும் கணக்கிடப்படவில்லை.

இந்த நிலையில் லாம்போக் தீவில் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.25 மணிக்கு மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் அமைப்பு கூறி உள்ளது. ஆனால் 6.2 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக இந்தோனேசிய தகவல்கள் கூறுகின்றன.

இந்த நில நடுக்கம் மாதரம் நகரில் இருந்து 13 கி.மீ. வடமேற்கில் மையம் கொண்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தை தொடர்ந்து அங்கு இதுவரை 355 அதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன.

நேற்றைய நில நடுக்கம் லாம்போக் தீவில் வசிக்கிற மக்கள் இடையே பெரும் பீதியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், டான்ஜங் மாவட்டத்தில் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

நேற்று நில நடுக்கம் ஏற்பட்டபோது அவர்கள் அங்கு இருந்து வெளியேறி, அழுது ஓலமிட்டவாறு வீதிகளுக்கு ஓடி வந்தனர்.

சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் சரிந்து விழுந்தன. பல கட்டிடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தன. ஹெல்மட் அணிந்திருந்த ஒரு பெண், தன் குழந்தைகளை கையில் ஏந்தியவாறு அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

ஸ்ரீலட்சுமி என்ற பெண் இந்த நில நடுக்கம் பற்றி கூறும்போது, ‘‘ நில நடுக்கம் ஏற்பட்டபோது நிவாரண பொருட்கள் வாங்குவதற்காக நாங்கள் நின்றபோது நில நடுக்கம் ஏற்பட்டது. எங்கள் கார் பின்னால் இருந்து மோதியதுபோல இருந்தது. சக்தி வாய்ந்த நில நடுக்கம் இது’’ என்று குறிப்பிட்டார்.

சாலைகளில் வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள், ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி விட்டு பதற்றத்துடன் ஆளுக்கொரு திசையில் ஓடியது பரிதாபமாக இருந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.