ஆப்கானிஸ்தானில் உள்ள கஜினி நகரம் யார் வசம்?


ஆப்கானிஸ்தானில் உள்ள கஜினி நகரம் யார் வசம்?
x
தினத்தந்தி 11 Aug 2018 10:45 PM GMT (Updated: 11 Aug 2018 6:48 PM GMT)

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு படைகளுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்பினருக்கும் தொடர்ந்து 18–வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில்  கஜினி மாகாணத்தின் தலைநகரமான கஜினி நகரத்தை பிடிப்பதற்கு கடந்த 9–ந் தேதி இரவில் தலீபான்கள் களத்தில் இறங்கினர். அவர்களை எதிர்த்து ஆப்கானிஸ்தான் படையினரும் மோதினர். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. தலீபான்களை குறிவைத்து வான் தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் இரு தரப்புக்கும் பலத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன.

இப்போது கஜினி நகரத்துக்கு தலீபான்கள், ஆப்கானிஸ்தான் அரசு என இரு தரப்பினரும் உரிமை கொண்டாடுகின்றனர்.

இதுபற்றி ஆப்கானிஸ்தான் நாட்டின் எம்.பி.யான சாகுல் ரெஜாயி கூறும்போது, ‘‘காபூலில் உள்ள மத்திய அரசு அதிகாரிகள் கஜினி நகரம் அரசின் வசம் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் கஜினி நகரத்தில் உள்ள அதிகாரிகளை நாங்கள் தொடர்பு கொண்டால் அவர்கள் இன்னும் சண்டை நடந்து கொண்டு இருக்கிறது என்று கூறுகிறார்கள். அங்கு படைகள் குவிக்கப்பட்டு உள்ளன. அமெரிக்கா தாக்குதல் ஹெலிகாப்டர்களை களத்தில் இறக்கி உள்ளது. ஆளில்லா விமான தாக்குதலும் நடத்தப்பட்டு உள்ளது’’ என்று குறிப்பிட்டார்.

ஆனால் தலீபான்கள் கஜினி நகரம் தங்கள் வசம் வந்து விட்டதாக கூறுகின்றனர். இதுபற்றி தலீபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் கூறுகையில், ‘‘கஜினி நகரத்தை எங்கள் வீரர்கள் முழுமையாக வெற்றி கொண்டு விட்டார்கள். ஆயுதங்கள், வெடிபொருட்கள், வாகனங்களை கைப்பற்றி உள்ளனர். கஜினி நகரத்தை எங்கள் வீரர்கள்தான் பாதுகாத்து வருகின்றனர்’’ என்று குறிப்பிட்டார்.


Next Story