உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 19 Aug 2018 8:45 PM GMT (Updated: 19 Aug 2018 8:42 PM GMT)

பிஜி மற்றும் டோங்கா ஆகிய நாடுகளுக்கு அருகே பசிபிக் பெருங்கடலில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

* பிஜி மற்றும் டோங்கா ஆகிய நாடுகளுக்கு அருகே பசிபிக் பெருங்கடலில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.2 புள்ளிகளாக பதிவானது. மிகவும் ஆழமான பகுதியில் நடந்த இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

* வங்கியில் போலி கணக்குகளை தொடங்கி கோடிக்கணக்கான ரூபாயை ‘டெபாசிட்’ செய்ததாக பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவருமான ஆசிப் அலி சர்தாரி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கியது.

* பொருளாதார தடைகள், வெளிநாட்டு நாணய மாற்று விகிதம், வட்டி விகிதம் மற்றும் பணவீக்கம் என பல்வேறு வழிகளில் அமெரிக்கா தங்களை மிரட்டுவதாக குற்றம் சாட்டி உள்ள துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், என்ன நடந்தாலும் அமெரிக்காவிடம் துருக்கி அடிபணியாது என சூளுரைத்துள்ளார்.

* இங்கிலாந்து நாடாளுமன்ற கட்டிடத்தை தாக்கும் நோக்கில் கடந்த 14-ந்தேதி வேகமாக காரை ஓட்டி வந்த சலி கேதர் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். சூடானில் பிறந்த இங்கிலாந்து நாட்டவரான அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இன்று (திங்கட்கிழமை) அவர் வெஸ்ட்மினிஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

* ஆஸ்திரிய வெளியுறவு மந்திரி கரின் நெய்சிலின் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு ஜெர்மனி சென்ற ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அந்த நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்து பேசினார். அப்போது உக்ரைன், சிரியா விவகாரங்கள் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர்.

Next Story