சிறையில் இருந்து விடுவிக்க கோரும் நவாஸ் ஷெரீப் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு


சிறையில் இருந்து விடுவிக்க கோரும் நவாஸ் ஷெரீப் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 21 Aug 2018 11:15 PM GMT (Updated: 21 Aug 2018 7:09 PM GMT)

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் லண்டனில் ‘அவென்பீல்டு’ சொகுசு வீடுகள் வாங்கி குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவரும், அவரது மகள் மரியமும், மருமகன் கேப்டன் சப்தாரும் தண்டிக்கப்பட்டனர்.

இஸ்லாமாபாத்,

நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு, மரியம் நவாசுக்கு 7 ஆண்டு, கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அடியலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் 3 பேரும் சிறையில் இருந்து விடுதலை ஆவதற்கு வசதியாக தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் அதார் மினல்லா, மியான்குல் ஹசன் அவுரங்கசீப் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர் மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதன்காரணமாக 3 பேரும் பக்ரீத் பண்டிகையை வீட்டுக்கு போய் கொண்டாடக்கூடிய நிலை இல்லை. அவர்கள் பக்ரீத் பண்டிகையை சிறையில் கொண்டாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு உள்ளது.

ஆனால் இப்படி பண்டிகையை நவாஸ் ஷெரீப் சிறையில் கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே 1999–ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராணுவ புரட்சி ஏற்பட்டபோது, நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் 2 பண்டிகைகளை சிறையில் கொண்டாட வேண்டியதாகி விட்டது.

இதே போன்று 1977–ம் ஆண்டு ராணுவப்புரட்சி ஏற்பட்டபோது, அப்போதைய பிரதமர் ஜூல்பிகர் அலி பூட்டோவும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு, பண்டிகைகளை சிறையில் கொண்டாட வேண்டிய சூழல் உருவானது என்பது நினைவுகூரத்தக்கது.


Next Story