உலக செய்திகள்

ஒரு கிலோ தக்காளியின் விலை 50 லட்சம்! + "||" + The price of one kg of tomatoes is 50 lakh!

ஒரு கிலோ தக்காளியின் விலை 50 லட்சம்!

ஒரு கிலோ தக்காளியின் விலை 50 லட்சம்!
ஒரு நாட்டில், ஒரு கிலோ தக்காளியின் விலை, அந்நாட்டுப் பணத்தில் 50 லட்சம் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும்.
தென்அமெரிக்க நாடான வெனிசூலாவின் பரிதாப நிலை இது.

கடுமையான பொருளாதாரச் சரிவில் சிக்கித் தவிக்கிறது, வெனிசூலா. அந்நாட்டின் பண மதிப்பு, கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து விட்டது.

இந்நிலையில், வெனிசூலாவில் புதிய பணத்தை (கரன்சி) அதிபர் நிக்கோலஸ் மதுரோ விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த ஆண்டு வெனிசூலாவின் பணவீக்கம் 10 லட்சம் சதவீதத்தைத் தொடும் என்று சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது.

வெனிசூலாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக அந்நாட்டின் பணமான ‘பொலிவாரின்’ மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதனால் அந்த நாட்டில் தற்போது அத்தியாவசியப் பொருட்களை வாங்க எவ்வளவு பணம் செலவிடவேண்டும் என்பதை அந்தப் பொருளையும், அதற்காகச் செலவிடவேண்டிய கட்டுக் கட்டான பணத்தை அருகே அடுக்கிவைத்தும் படமெடுத்து விளக்கியுள்ளார், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்படக்காரர் கார்லோஸ் கார்சியா ரவ்லிங்ஸ்.

அதன்படி, ஒரு கிலோ தக்காளியின் விலை என்ன தெரியுமா? 50 லட்சம் பொலிவார்கள்.

வெனிசூலா தலை நகர் காரகாசில் 2.4 கிலோ கோழிக்கறி விலை 1.46 கோடி பொலிவார்கள்.

இங்கு சமீபத்தில், ஒரு கழிப்பறைத் தாள் உருளை 26 லட்சம் பொலிவாருக்கு விற்கப்பட்டது.

இரு கைப்பிடி அளவு கேரட்டுகளின் விலை 30 லட்சம் பொலிவார்கள்.

ஒரு கிலோ அரிசியின் விலை 25 லட்சம் பொலிவார்கள்.

ஒரு பாக்கெட் சானிட்டரி நாப்கின்களுக்கு 35 லட்சம் பொலிவார்கள் செலவிட வேண்டியிருக்கும்.

ஒரு கிலோ பாலாடைக்கட்டியின் விலை 75 லட்சம் பொலிவார்கள்.

குழந்தைகள் அணியும் ‘நேப்பிஸ்’ விலை 80 லட்சம் பொலிவார்கள்.

ஒரு கிலோ மாட்டுக்கறியின் விலை 95 லட்சம் பொலிவார்கள்.

நம் நாட்டின் ஒரு ரூபாய், 3546 பொலிவார்களுக்குச் சமம். அதேவேளையில், 2 லட்சத்து 48 ஆயிரத்து 520 பொலிவார்கள் கொடுத்தால்தான் ஓர் அமெரிக்க டாலர் கிடைக்கும். இப்படி பொலிவார் தொடர்பான கணக்கீடுகள் கிறுகிறுக்க வைக்கின்றன.

கடந்த ஜூலை மாதம் வெனிசூலாவின் பண வீக்கம் 82 ஆயிரத்து 700 சதவீதத்தை எட்டியது.

வெனிசூலாவின் புதிய பணம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், அதுசார்ந்து நிலவும் குழப்பங்கள், கவலைகள் காரணமாக அந்நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கிவைக்கத் தொடங்கியுள்ளனர்.

பொதுவாக நாம், விலைவாசி அதிகரிக்கும்போது, விண்ணை முட்டும் விலைவாசி என்போம்.

வெனிசூலாவிலோ விலைவாசி விண்ணையும் தாண்டிச் செல்கிறதே?