போலி தகவல் பரவுவதை முகநூல் தடுக்காதது மிகப்பெரிய தவறுதான் மார்க் ஜூக்கர்பெர்க் ஒப்புதல்


போலி தகவல் பரவுவதை முகநூல் தடுக்காதது மிகப்பெரிய தவறுதான் மார்க் ஜூக்கர்பெர்க் ஒப்புதல்
x
தினத்தந்தி 7 Sep 2018 11:15 PM GMT (Updated: 7 Sep 2018 7:33 PM GMT)

இன்று உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் முகநூலும் (பேஸ் புக்) ஒன்று. ஆனால் பலர் முகநூலை தவறாக பயன்படுத்தி போலி தகவல்களை பரப்பி வருகின்றனர்.

வாஷிங்டன்,

இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் இது பெரும் பிரச்சினையாக உருவெடுக்கிறது. இதுபற்றி அண்மையில் இந்திய அரசு வாட்ஸ் அப், முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தும் இருந்தது.

இந்த நிலையில் முகநூல் அதிபர் மார்க் ஜூக்கர்பெர்க் தனது நிறுவனம் போலியான தகவல்கள் பரவுவதை தடுப்பதற்கு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு உள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:–

போலி தகவல்களும், அவதூறும் பரவுவதை தடுப்பதில் நாங்கள் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது உண்மைதான். மக்களும் முகநூலை இந்த அளவிற்கு தவறான செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. போலி தகவல்களால் வெளிநாட்டு தேர்தல்கள், வெறுப்பு பேச்சு, ரகசிய தகவல்கள் போன்றவை பரிமாற்றம் செய்யப்படுவதால் பெரும் பாதிப்பும் ஏற்படுகிறது. மக்களின் குரலாகவே முகநூல் இருக்க விரும்புகிறோம். ஆனால் பலர் பிறரை புண்படுத்தும் செயலுக்கு முகநூலை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இதில் எங்களுக்கு பரந்த அளவில் பொறுப்பு இருப்பதை நாங்கள் உணரவில்லை. இது எங்களது மிகப்பெரிய தவறுதான். இனி இதில் நாங்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுவோம். மக்களிடையே நேர்மறையான இணைப்பை ஏற்படுத்துவதற்குரிய தளமாக முகநூலை பயன்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story