உலக செய்திகள்

பிரேசிலில் தேர்தல் பிரசாரத்தில் அதிபர் வேட்பாளருக்கு கத்திக்குத்து + "||" + In Brazil the election campaign for the presidential candidate stabbed

பிரேசிலில் தேர்தல் பிரசாரத்தில் அதிபர் வேட்பாளருக்கு கத்திக்குத்து

பிரேசிலில் தேர்தல் பிரசாரத்தில் அதிபர் வேட்பாளருக்கு கத்திக்குத்து
பிரேசிலில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிபர் வேட்பாளரை, ஒருவர் கத்தியால் குத்தினார். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பிரேசிலியா,

பிரேசில் நாட்டில் அடுத்த மாதம் (அக்டோபர்) அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களில் ஒருவர் சமூக தாராளவாத கட்சியை சேர்ந்த ஜெய்ர் போல்சேனாரோ (வயது 63).

இனவெறிக்கு ஆதரவு நிலைபாடுகளால் பிரேசிலில் பலரது கோபத்துக்கு உள்ளாகி சர்ச்சைக்குரிய நபராக திகழ்ந்த இவருக்கு, சமீபகாலமாக ஆதரவு பெருகி வருகிறது. ‘பிரேசிலின் டிரம்ப்’ என்று வர்ணிக்கப்படும் இவரை சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.

குற்றங்களை தடுப்பதில் வலிமையான தலைவராக இவர் இருப்பார் என்று அவருடைய ஆதரவாளர்கள் கருதுகின்றனர். அதிபர் தேர்தலில் போல்சேனாரோ அதிகப்படியான வாக்குகளை பெறலாம் என சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.

இந்த நிலையில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மினாஸ் ஜெராய்ஸ் ஜூய்ஸ் மாகாணத்தின் டி போரா நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரசார பேரணியில் போல்சேனாரோ கலந்துகொண்டார். அவர் தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் நின்றுகொண்டு வாக்கு சேகரித்துக்கொண்டிருந்தார்.

அப்போது கூட்டத்துக்குள் நுழைந்த மர்ம ஆசாமி ஒருவர் போல்சேனாரோவை கத்தியால் குத்தினார். இதில் அவர் வலியால் அலறி துடித்தார். உடனே அவருடைய ஆதரவாளர்கள் அவரை காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அதனை தொடர்ந்து போல்சேனாரோயின் மகன் பிலாவியோ தனது தந்தைக்கு ஏற்பட்ட காயம் மேலோட்டமானது என்றும், அவர் நலமாக இருப்பதாகவும் டுவிட்டரில் பதிவிட்டார். இது அவருடைய ஆதரவாளர்களுக்கு நிம்மதி அளித்தது.

ஆனால் அடுத்த 2 மணி நேரத்து பிறகு, ‘‘எதிர்பார்த்ததைவிட ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது. அவர் அதிக ரத்தத்தை இழந்துவிட்டார். ஏறக்குறைய இறக்கும் தருவாயில்தான் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தயவுசெய்து அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’’ என பிலாவியோ டுவிட்டரில் தெரிவித்தார்.

முன்னதாக போல்சேனாரோவை கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒலிவெய்ரா (40) என்கிற நபரை போலீசார் கைது செய்தனர். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக போல்சேனாரோவின் ஆதரவாளர்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.

ஒலிவெய்ரா, மனம் நலம் பாதிக்கப்பட்ட நபர் என போலீசார் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சம்பவம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போல்சேனாரோ மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அதிபர் வேட்பாளர்கள் உள்பட்ட அரசியல் தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தற்போதைய அதிபர் மிச்செல் டெமர் இது தொடர்பாக கூறுகையில், ‘‘ஜனநாயக நாட்டில் இதுபோன்ற தாக்குதல்களை சகித்துக்கொள்ள முடியாது. சகிப்புத்தன்மை என்பது ஜனநாயகத்தின் ஓர் அங்கம். மேலும் அது சட்டத்தின் ஒரு பகுதியாகும். போல்சேனாரோ விரைவில் குணமடைவார் என நம்புகிறேன்’’ என தெரிவித்தார்.

இதற்கிடையில் போல்சேனாரோவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் ‘‘போல்சேனாரோவுக்கு ஏற்பட்ட காயங்கள் சாகும் நிலைக்கு அவரை கொண்டு சென்றன. ஆனால் 2 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது அவர் நலமாக இருக்கிறார்’’ என அறிவித்தனர்.