பாகிஸ்தான் ஜனாதிபதியாக ஆரிப் ஆல்வி பதவி ஏற்றார்


பாகிஸ்தான் ஜனாதிபதியாக ஆரிப் ஆல்வி பதவி ஏற்றார்
x
தினத்தந்தி 9 Sep 2018 11:00 PM GMT (Updated: 9 Sep 2018 7:35 PM GMT)

பாகிஸ்தானில் ஜனாதிபதியாக இருந்து வந்த மம்னூன் உசேனின் பதவிக்காலம் நேற்று முன்தினம் முடிந்தது.

இஸ்லாமாபாத்,

புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த 4–ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஆரிப் ஆல்வி (வயது 69) அமோக வெற்றி பெற்றார்.

அங்கு ஜூலை மாதம் 25–ந் தேதி நடந்த பொதுத்தேர்தலில் ஆரிப் ஆல்வி, கராச்சி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.

இவர் இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் பல் மருத்துவர் டாக்டர் ஹபீப் உர் ரகுமான் இலாஹி ஆல்வியின் மகன் ஆவார்.

இஸ்லாமாபாத்தில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த எளிய விழாவில் ஆரிப் ஆல்வி, பாகிஸ்தானின் 13–வது ஜனாதிபதியாக பதவி ஏற்றார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் பதவிப்பிரமாணம் செய்து வைத்து, வாழ்த்து தெரிவித்தார்.

பதவி ஏற்பு விழாவில் பிரதமர் இம்ரான்கான், முன்னாள் ஜனாதிபதி மம்னூன் உசேன், வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷி, நிதி மந்திரி ஆசாத் உமர், ராணுவ மந்திரி பெர்வேஸ் கட்டாக் மற்றும் மந்திரிகள், நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத் கய்சர், செனட் சபை தலைவர் சாதிக் சஞ்ச்ரானி, ராணுவ தளபதி கமர் ஜாவத் பஜ்வா, விமானப்படை தளபதி முஜாஹித் அன்வர் கான், கடற்படை தளபதி ஜப்பார் மக்மூத் அப்பாசி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சவுதி தகவல்துறை மந்திரி அவ்வாத் பின் சலே அல் அவாத்தும் கலந்து கொண்டார்.


Next Story