‘சர்வதேச கோர்ட்டுக்கு பொருளாதார தடை விதிப்போம்’ - அமெரிக்கா மிரட்டல்


‘சர்வதேச கோர்ட்டுக்கு பொருளாதார தடை விதிப்போம்’ - அமெரிக்கா மிரட்டல்
x
தினத்தந்தி 11 Sep 2018 11:30 PM GMT (Updated: 11 Sep 2018 7:07 PM GMT)

சர்வதேச கோர்ட்டுக்கு பொருளாதார தடை விதிப்போம் என்று அமெரிக்கா மிரட்டி இருப்பது, உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாஷிங்டன்,

ரோமில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் கீழ், நெதர்லாந்து நாட்டில் திஹேக் நகரில் 2002-ம் ஆண்டு சர்வதேச குற்றவியல் கோர்ட்டு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கோர்ட்டில் 123 நாடுகள் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளன. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் சேராமலும் இருக்கின்றன.

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித சமுதாயத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து சர்வதேச கோர்ட்டு விசாரணை நடத்தி நீதி வழங்குகிறது.

இந்த சர்வதேச கோர்ட்டை அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இப்போது அதன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் மிகக்கடுமையாக விமர்சித்து இருப்பதுடன், பொருளாதார தடை என்ற ஆயுதத்தைக் காட்டி மிரட்டலும் விடுத்து இருக்கிறார்.

சர்வதேச கோர்ட்டின் வக்கீல் பாதோ பென்சவுடா, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் செய்த போர்க்குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து போர்க்குற்றங்கள் குறித்தும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி உள்ளார். இதை சர்வதேச கோர்ட்டு பரிசீலித்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் ரகசிய காவல் மையங்களில், கைது செய்து அடைத்தவர்களை அமெரிக்க ராணுவம் சித்ரவதை செய்ததற்கு அர்த்தம் உள்ள ஆதாரங்கள் இருப்பதாக சர்வதேச கோர்ட்டு ஒரு அறிக்கையில் கூறியது.

மேலும், காசா மற்றும் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து இஸ்ரேல் மீது விசாரிக்க பாலஸ்தீனம் சர்வதேச கோர்ட்டில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த இரண்டு பிரச்சினைகளும், அமெரிக்காவுக்கு சர்வதேச கோர்ட்டு மீது எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியதாவது:-

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச கோர்ட்டை ஆப்கானிஸ்தானும் கேட்கவில்லை. சர்வதேச கோர்ட்டில் உறுப்பினர்களாக எந்தவொரு நாடும் கேட்கவில்லை. சர்வதேச கோர்ட்டு அமெரிக்க இறையாண்மைக்கு எதிராகவும், அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.

நாங்கள் சர்வதேச கோர்ட்டுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம். நாங்கள் சர்வதேச கோர்ட்டுக்கு உதவ மாட்டோம். நாங்கள் சர்வதேச கோர்ட்டில் சேரவும் மாட்டோம். சர்வதேச கோர்ட்டு, அதன் முடிவை தேடிக்கொள்ள விட்டு விடுவோம். எல்லாவற்றுக்கும் மேலாக, எங்களைப் பொறுத்தமட்டில் சர்வதேச கோர்ட்டு ஏற்கனவே செத்துப்போய் விட்டது.

சர்வதேச கோர்ட்டு சட்ட விரோதமானது. எங்கள் குடிமக்களைக் காப்பதற்கு நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம். அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டால் சர்வதேச கோர்ட்டுக்கு எதிராக பொருளாதார தடை விதிப்போம்.

சர்வதேச கோர்ட்டை சேர்ந்தவர்கள் மீது அமெரிக்க குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். அமெரிக்கர்களுக்கு எதிரான விசாரணையில் சர்வதேச கோர்ட்டுக்கு உதவுகிற எந்தவொரு நிறுவனம் அல்லது நாட்டின் மீதும் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், ஜான் போல்டனின் கருத்துக்களை ஆதரித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “அமெரிக்க குடிமக்களையும், எங்கள் நட்பு நாடுகளையும் சர்வதேச கோர்ட்டின் நேர்மையற்ற வழக்குகளில் இருந்து காப்பதற்கு ஜனாதிபதி டிரம்ப் எதை வேண்டுமானாலும் செய்வார்” என்று குறிப்பிட்டார்.

சர்வதேச கோர்ட்டுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிற பட்சத்தில், அதன் நீதிபதிகளும், வக்கீல்களும் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது. அவர்களது அமெரிக்க நிதிகள் முடக்கப்படும். அமெரிக்காவின் மிரட்டலுக்கு சர்வதேச கோர்ட்டு பதிலடி கொடுத்து உள்ளது.

இது தொடர்பாக சர்வதேச கோர்ட்டு விடுத்து உள்ள அறிக்கையில், “சர்வதேச கோர்ட்டு என்பது நீதி வழங்கும் ஒரு அமைப்பு. ரோமில் ஏற்படுத்தப்பட்ட சட்ட எல்லைக்குள் அது கண்டிப்புடன் செயல்படுகிறது. அது சுதந்திரமான, பாரபட்சமற்ற நீதி வழங்க உறுதி கொண்டு உள்ளது” என கூறப்பட்டு உள்ளது. இருப்பினும் சர்வதேச கோர்ட்டுக்கு பொருளாதார தடை விதிப்போம் என்னும் அமெரிக்காவின் மிரட்டல், உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story