நவாஸ் ஷெரீப், அவரது மகள் மற்றும் மருமகனுக்கு வழங்கப்பட்ட பரோல் 3 நாட்கள் நீட்டிப்பு


நவாஸ் ஷெரீப், அவரது மகள் மற்றும் மருமகனுக்கு வழங்கப்பட்ட பரோல் 3 நாட்கள் நீட்டிப்பு
x
தினத்தந்தி 12 Sep 2018 3:27 PM GMT (Updated: 12 Sep 2018 3:27 PM GMT)

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷெரீப், அவரது மகள் மற்றும் மருமகனுக்கு வழங்கப்பட்ட பரோல் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இஸ்லாமாபாத்,

‘பனாமா கேட்’ ஊழலில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி பேகம் குல்சூம் லண்டனில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். 2014-ம் ஆண்டிலிருந்து சிகிச்சை பெற்றுவரும் அவருடைய உடல்நிலை கடந்த சிலநாட்களாக மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 

இந்நிலையில், தனது மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார் நவாஸ் ஷெரீப்.  அவரது மனுவை ஏற்று கொண்ட நீதிமன்றம் அவருக்கு 12 மணி நேர பரோல் கொடுத்து உத்தரவிட்டது. இதையடுத்து, ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷரிப் மற்றும் மரியம் நவாஸ், அவரது கணவர் ஆகியோர் லாகூரை வந்தடைந்தனர். 

தொடர்ந்து குல்சூம் இறுதி சடங்கில் கலந்து கொள்ள 5 நாட்கள் பரோல் கேட்டு ஷெரீப்பின் குடும்பத்தினர் மனு செய்தனர்.  இதனை அடுத்து 3 பேருக்கும் 3 நாட்கள் பரோல் வழங்க அரசு முடிவு செய்தது.

அதன்படி இன்றிரவில் இருந்து சனி கிழமை இரவு வரையில் 3 பேருக்கான பரோல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.  ஒருவேளை குல்சூமின் இறுதி சடங்கு நிகழ்ச்சி காலதாமதம் ஆனால் பரோல் தொடர்ந்து நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story