சமையல் எரிவாயு குழாய் வெடிப்புகள்: பெரும் தீ விபத்து - ஒருவர் பலி, 3 நகரங்களில் மக்கள் வெளியேற்றம்


சமையல் எரிவாயு குழாய் வெடிப்புகள்: பெரும் தீ விபத்து - ஒருவர் பலி, 3 நகரங்களில் மக்கள் வெளியேற்றம்
x
தினத்தந்தி 14 Sep 2018 10:45 PM GMT (Updated: 14 Sep 2018 6:56 PM GMT)

அமெரிக்காவில் சமையல் எரிவாயு குழாய் வெடிப்புகளால் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஒருவர் பலியானதுடன், 3 நகரங்களில் மக்கள் வெளியேறினர்.

பாஸ்டன்,

அமெரிக்காவில் பாஸ்டன் நகரத்தில் கொலம்பியா கியாஸ் நிறுவனத்தின் சமையல் எரிவாயு குழாயில் அடுத்தடுத்து வெடிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதனால் அங்கு பல இடங்களில் கட்டிடங்கள், வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. 70-க்கும் மேற்பட்ட தீ விபத்து குறித்து புகார்கள் வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

அந்த நகரத்தையொட்டிய லாரன்ஸ், ஆண்டோவர், வடக்கு ஆண்டோவர் நகரங்களில் சமையல் எரிவாயு நாற்றம் பரவியதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் காரணமாக பதற்றத்தில் அந்த நகரங்களை சேர்ந்த மக்கள் பெருமளவில் வீடுகளை விட்டு வெளியேறினர்.

தீயணைப்பு படையினர் தீயணைப்பு வண்டிகளுடன் வந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்து நேரிட்ட இடங்களில் எல்லாம் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இந்த தீ விபத்துகளில் ஒருவர் பலியாகி உள்ளதாகவும், 12 பேர் படுகாயம் அடைந்து உள்ளதாகவும், அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் செஞ்சிலுவை சங்க கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டனர். லாரன்ஸ் நகரில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.

மசாசூசெட்ஸ் மாகாண கவர்னர் சார்லி பேக்கர் விடுத்துள்ள அறிக்கையில், “நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். உள்ளூர் அதிகாரிகளின் அறிவுரைக்கு ஏற்ப மக்கள் நடந்து கொள்ள வேண்டும்” என்று கூறி உள்ளார்.

Next Story