உலக செய்திகள்

விமான நிலையத்தில் ‘கிருமி அபாயம்’! + "||" + 'Germ-threat' at airport

விமான நிலையத்தில் ‘கிருமி அபாயம்’!

விமான நிலையத்தில் ‘கிருமி அபாயம்’!
பளபளப்பாகவும் பரபரப்பாகவும் திகழும் விமான நிலையங்களிலும் கிருமி அபாயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்களில் பாதுகாப்புச் சோதனையின்போது பொருட்களை வைப்பதற்காக வழங்கப்படும் தட்டுகளில் கழிவறையைவிட அதிக கிருமிகள் உள்ளன என்று பின்லாந்து, இங்கிலாந்து ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.


விமான நிலையங்களில் பாதிக்கும் மேற்பட்ட தட்டுகளில் நுரையீரல் தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் கிருமிகள் இருக்கலாம் என்று அந்த ஆய்வு தெரிவித்தது. ‘பயோமெட்’ தொற்றுநோய் இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

கடந்த 2015 -2016-ல் சளிக்காய்ச்சல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் ஹெல்சிங்கி விமான நிலையத்தில் இருந்த தட்டுகளில் இருந்து மூன்று வெவ்வேறு சமயங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

அப்போது எட்டு மாதிரிகளில் நான்கில், சளிக்காய்ச்சலுக்கான அறிகுறிகளை ஏற்படுத்தும் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்லாந்தின் தேசிய சுகாதார நல அமைப்பும், நாட்டிங்காம் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய இந்த ஆய்வின் கட்டுரை ஆசிரியர், “விமான நிலையத்தில் பயணிகளுக்கு கிருமிகள் தொற்றும் தளமாக தட்டுகள் உள்ளன” என்று குறிப்பிட்டார்.

இதனால் கைகளைக் கழுவுவதற்கு கிருமிநாசினியை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என்றும், தட்டுகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்றும் ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.