சாதனைகளின் நாடு!


சாதனைகளின் நாடு!
x
தினத்தந்தி 15 Sep 2018 11:40 AM GMT (Updated: 15 Sep 2018 11:40 AM GMT)

பசுமையும் குளுமையும் நிறைந்த சுவிட்சர்லாந்து, பல அதிசயங்களுக்கும் சாதனைகளுக்கும் சொந்தமான நாடாகும். அவற்றில் சிலவற்றைப் பற்றி...

உலகின் சாய்வான பல் சக்கர ரெயில் (பிலாஸ்டுஸ்பான்): 1889-ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த ரெயில் சேவை, லூசேர்ன் ஏரிப்பகுதியில் செல்லும்போது 48 டிகிரி கோணத்தில் செல்வது ஓர் உலக அதிசயம். ஆனால் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 9 கி.மீ.தான்.

உலகின் நீண்ட ரெயில் குகைப்பாதை: மொத்தம் 57 கி.மீ. நீளமுள்ள கோத்தார்டு பேஸ் குகைப்பாதைதான் உலகின் நீளமான குகைப் பாதையாகும். பாறைகளுக்கு அடியில் 2 ஆயிரத்து 300 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள இந்தப் பாதையால் சூரிச்சிலிருந்து லுகானோவுக்கு 45 நிமிடங்களில் சென்றுவிட முடியும்.

உலகின் நீண்ட படிக்கட்டு: ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்குத் திறந்துவிடப்படும் நீசன் படிக்கட்டு, பெர்னீஸ் ஆல்ப்ஸ் பகுதியில் ரெயில்பாதை ஒன்றை ஒட்டி அமைந்துள்ளது. இந்தப் படிக்கட்டில் 11 ஆயிரத்து 674 படிகள் உள்ளன.

உலகின் முதல் சுழலும் கேபிள் கார்: இதுவும் லூசேர்ன் ஏரியின் அருகில்தான் அமைக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 20 மீட்டர் உயரத்தில் சுற்றுலாப்பயணிகள் பயணிக்கும்போது அவர்கள் இயற்கைக் காட்சிகளை ரசிக்கும் வகையில் 360 டிகிரி சுழலக் கூடியது இந்த கேபிள் கார்.

பயமுறுத்தும் ‘டிட்லிஸ் கிளிப் வாக்’ தொங்கு பாலம்: வெறும் ஒரு மீட்டர் அகலம், 100 மீட்டர் நீளம் கொண்ட இந்த தொங்கு பாலம் பனிப்பாறை ஒன்றின் மீது 500 மீட்டர் உயரத்தில் தலைச்சுற்றலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. டிட்லிஸ் மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் இது அமைக்கப்பட்டிருக்கிறது.

உலகின் அதிக கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை பெற்றவர்: சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரோஜர் பெடரர், கடந்த ஜனவரி மாதம் தனது 20-வது கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தைப் பெற்று புதிய உலக சாதனை படைத்தார்.

உலகின் மிகப்பெரிய பனி வீடு: உலகின் மிகப்பெரிய இக்ளூ என்று அழைக்கப்படும் பனி வீடு சுவிட்சர்லாந்தின் ஸெர்மாட்டில் கட்டப்பட்டுள்ளது. 10.5 மீ. உயரமும், உட்புறத்தில் 12.9 மீ. விட்டமும் கொண்ட இந்த இக்ளூவை அமைக்க 18 பேர் கொண்ட ஒரு குழுவுக்கு 3 வாரங்கள் ஆயின.

உலகின் அதிக சாக்லேட் உண்ணும் நாடு: சுவிஸ் சாக்லேட்கள் உலகம் முழுவதிலும் பிரபலம் என்பது அனைவரும் அறிந்த விஷயம் என்றாலும், அதிக அளவில் சாக்லேட் உண்பவர்களும் சுவிஸ் நாட்டவர்கள்தான். 2015-ம் ஆண்டு கணக்கின்படி சுவிஸ் மக்கள் நபர் ஒருவருக்கு ஆண்டுதோறும் 8.98 கிலோ சாக்லேட் சாப்பிடுகிறார்களாம்.

சூரிய சக்தி விமானத்தில் முதலில் உலகப் பயணம்: கடந்த 2016-ம் ஆண்டு ‘சோலார் இம்பல்ஸ்’ என்னும் சூரிய சக்தி விமானத்தை உருவாக்கிய பெர்ட்ரண்ட் பிக்கார்டு, ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் ஆகிய இருவரும் தங்கள் விமானத்தில் உலகம் முழுவதையும் சுற்றிவந்தார்கள்.

அது மட்டுமின்றி மிக நீண்ட பயணம், அதிக உயரத்தில் பயணம் போன்ற பல உலக சாதனைகளை சுவிஸ் மக்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். 

Next Story