சீன இறக்குமதி பொருட்களுக்கான கூடுதல் வரியை அறிவித்தார் டொனால்டு டிரம்ப்


சீன இறக்குமதி பொருட்களுக்கான கூடுதல் வரியை அறிவித்தார் டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 18 Sep 2018 2:43 AM GMT (Updated: 18 Sep 2018 2:43 AM GMT)

சீன இறக்குமதி பொருட்களுக்கான கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ளார்.

வாஷிங்டன், 

உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அது வர்த்தக போராக மாறி உள்ளது. சீனா தனது அறிவுசார் சொத்துக்களை திருடுவதாகவும், தொழில் நுட்பங்களை தன் நாட்டுக்கு மாற்றிக்கொண்டு வருவதாகவும் அமெரிக்கா புகார் கூறுகிறது. சீனா தொடர்ந்து இந்தப் புகாரை மறுத்து வருகிறது.ஆனாலும்கூட, சீனாவால் தங்களுக்கு ஏற்படுகிற வர்த்தக பற்றாக்குறையை சரிகட்டுவதற்கு, அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

தொடர்ந்து சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் உலகளவில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.கடந்த மாதம்கூட, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா அதிரடியாக கூடுதல் வரி விதித்தது.

இந்த நிலையில், மேலும் 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப்பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார்.  செப்டம்பர் 24 -ஆம் தேதி முதல் கூடுதல் வரி விதிப்பு 10 சதவீதமாகவும், ஜனவரியில் இருந்து 25 சதவீதமாகவும் அதிகரிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார். 

மேலும், சீனா தனது நியாயமற்ற வர்த்தகத்தை தொடர்ந்து பின்பற்றுவதாகவும் தெரிவித்த டிரம்ப், இந்த வரிவிதிப்புக்கு பதில் நடவடிக்கையாக எங்களின் விவசாய பொருட்கள், தொழில்பொருட்கள் ஆகியவற்றுக்கு சீனாவும் கூடுதல் வரி விதிக்குமேயானால், நாங்கள் மூன்றாவது கட்டமாக சீன பொருட்களுக்கு வரியை கூட்டுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளார். 

கூடுதல் வரி விதிப்பு பட்டியலில் இணைய தொழில்நுட்ப தயாரிப்புகள், மின்னணு பொருட்கள், நுகர்வோர் பயன்பாட்டுப்பொருட்கள், சீன கடல் உணவுகள், மரச்சாமான்கள், விளக்குகள், டயர்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சைக்கிள்கள், கார் இருக்கைகள் இடம் பெற்றுள்ளன.

Next Story