இரு கொரியாக்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது


இரு கொரியாக்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது
x
தினத்தந்தி 18 Sep 2018 11:30 PM GMT (Updated: 18 Sep 2018 6:10 PM GMT)

வட கொரியாவின் பியாங்யாங் நகரில் இரு கொரியாக்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது.

பியாங்யாங்,

வடகொரியாவின் பியாங்யாங் நகரில் இரு கொரியாக்களின் தலைவர்கள் பேச்சு வார்த்தை தொடங்கியது. இதில், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடும் விவகாரத்தில் திருப்புமுனை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

1953–ம் ஆண்டு கொரியப் போர் முடிந்த பின்னர் வட கொரியாவும், தென் கொரியாவும் பகை நாடுகளாக விளங்கி வந்தன. இந்த நிலையில் தென்கொரியாவில் பியாங்சாங் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், வடகொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே நட்புறவு மலரத் தொடங்கியது.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் இரு நாட்டு எல்லையில் உள்ள பன்மூன்ஜோம் கிராமத்தில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பு இணக்கமான முறையில் நடந்தது. அதைத் தொடர்ந்து தென்கொரியா எடுத்த முயற்சியின் பலனாகத்தான் வட, தென் துருவங்கள் போன்று விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ஜூன் மாதம் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்துப்பேசினர்.

அப்போதுதான் கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உறுதி அளித்து, டிரம்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் பின்னர் அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான வடகொரியாவின் நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்ற போதிலும், அந்த நாடு அணுகுண்டுகளையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையோ சோதித்து பார்க்கவில்லை.

இந்த நிலையில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடன் ஏற்கனவே 2 முறை பேச்சு வார்த்தை நடத்தி  உள்ள நிலையில் 3–வது சுற்று பேச்சு வார்த்தை நடத்துவதற்காக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், மனைவி  கிம் ஜங் சூக்குடன் நேற்று பியாங்யாங் நகருக்கு 3 நாள் பயணமாக சென்றார். உள்ளூர் நேரப்படி காலை 9.50 மணிக்கு விமானத்தில் சென்றிறங்கிய அவர்களை வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், மனைவி ரி சோல் ஜூ மற்றும் உயர் அதிகாரிகளுடன் வந்து வரவேற்றார்.

கிம் ஜாங் அன்னும், மூன் ஜே அன்னும் முதலில் கை குலுக்கிக்கொண்டனர். பின்னர் கட்டித்தழுவினர். தொடர்ந்து மூன் ஜே இன்னுக்கு வடகொரியாவின் ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அதன்பின்னர் அங்கே கூடி இருந்த வடகொரிய மக்களுடன் புன்னகையுடன் மூன் ஜே இன் கை குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கூட்டத்தினர் கொரிய ஒருங்கிணைப்பு கொடிகளை ஏந்தி இருந்தனர்.

அதன்பின்னர் இரு தலைவர்களும் திறந்த காரில் பியாங்யாங் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றனர். வழி நெடுக அவர்களை வடகொரிய மக்கள் மலர்களைத் தூவி வரவேற்று தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

பகல் 3.45 மணிக்கு கிம் ஜாங் அன்னும், மூன் ஜே இன்னும் பேச்சு வார்த்தையை தொடங்கினார்கள். கொரிய போரை முறைப்படி முடிவுக்கு கொண்டு வந்து இரு தரப்பு சமரச ஒப்பந்தம் ஏற்படுத்துதல், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுதல், இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்பை பலப்படுத்துதல், படை வீரர்கள் மோதலைத் தடுத்தல் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த பேச்சு வார்த்தையில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த பேச்சு வார்த்தையின்போது இரு தரப்பு உயர்மட்டக்குழுவினரும் இடம் பெற்று உள்ளனர்.

இந்த பேச்சு வார்த்தையைப் பொறுத்தமட்டில், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை கை விடும் விவகாரத்தில் வடகொரியா விட்டுக்கொடுத்து, புதிய திருப்புமுனையை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு உலக அரங்கில் நிலவுகிறது.

வடகொரியாவுக்கு புறப்படுவதற்கு முன்பாக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், ‘‘ நான் சமாதானத்தை சாதிக்க விரும்புகிறேன். உலக அரங்கில் என்ன நடக்கும் என்பதைப் பொருட்படுத்தாமல், நிரந்தர சமாதானத்தை அடைவதே எனது நோக்கம்’’ என்று குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.

இரு தலைவர்களும் இன்று (புதன்கிழமை) கூட்டறிக்கை வெளியிட்டு, நிருபர்களை கூட்டாக சந்திப்பார்கள் என தகவல்கள் கூறுகின்றன. அப்போது பேச்சு வார்த்தை பற்றிய தகவல்கள் வெளியாகும்.


Next Story