இம்ரான் கானின் பேச்சுவார்த்தை அழைப்பினை பிரதமர் மோடி ஏற்று கொள்வார்; பி.டி.பி. நம்பிக்கை


இம்ரான் கானின் பேச்சுவார்த்தை அழைப்பினை பிரதமர் மோடி ஏற்று கொள்வார்; பி.டி.பி. நம்பிக்கை
x
தினத்தந்தி 20 Sep 2018 10:15 AM GMT (Updated: 20 Sep 2018 10:15 AM GMT)

பாகிஸ்தான் பிரதமர் கானின் பேச்சுவார்த்தை அழைப்பினை பிரதமர் மோடி ஏற்று கொள்வார் என மக்கள் ஜனநாயக கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஸ்ரீநகர்,

இந்திய ராணுவ தளங்களின் மீது பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட தீவிரவாத குழுக்கள் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரியில் இருந்து தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இதனால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த போவதில்லை என இந்தியா அறிவித்தது.  தீவிரவாதம் மற்றும் பேச்சுவார்த்தை ஒன்றாக நடந்திட முடியாது என்றும் தெரிவித்தது.

தொடர்ந்து உரி தீவிரவாத தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதனால் ஏற்பட்ட பதற்றத்தினை அடுத்து 2016ம் ஆண்டு நவம்பரில் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டில் இருந்து இந்தியா விலகியது.  இந்த நிலையில் புதிய பிரதமராக கான் பதவியேற்று இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான் அண்டை நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. பொது சபையில் இந்த மாதம் பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி மெஹ்மூத் குரேஷி மற்றும் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேச வேண்டும் என கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி முகமது பைசல் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியொன்றில், பிரதமர் (இம்ரான் கான்) நல்லெண்ண முறையில் பிரதமர் மோடிக்கு பதிலளித்துள்ளார்.

அனைத்து விவகாரங்களை பற்றி நாம் பேசி தீர்ப்போம்.  இந்தியாவிடம் இருந்து முறையான பதில் வரும்வரை நாங்கள் காத்திருப்போம் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் காஷ்மீரில் கடந்த ஜூன் 19ந்தேதி வரை பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் இருந்த மக்கள் ஜனநாயக கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நல்லெண்ண முயற்சிக்கு பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி.  உங்களது உணர்வுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சரியாக பதில் அளித்திடுவார் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.  இந்த நிலையில் பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வாக அமையும் என்று தெரிவித்துள்ளது.


Next Story