உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 21 Sep 2018 11:00 PM GMT (Updated: 21 Sep 2018 4:54 PM GMT)

* மெக்சிகோவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மானுவல் லோபஸ் ஒபராடோ சமீபத்தில் சாதாரண பயணிகள் விமானம் ஒன்றில் பயணம் செய்தார்.

பயணம் செய்தபோது கனமழையின் காரணமாக விமானத்தினுள்ளேயே சுமார் 3 மணி நேரம் சிக்கித் தவிக்க நேர்ந்தது. எனினும் அதிபருக்கான விசே‌ஷ விமானத்தை விற்பதுடன், தொடர்ந்து பயணிகள் விமானத்தில்தான் பயணிப்பேன் என்பதில் அவர் விடாப்பிடியாக உள்ளார்.

* ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோர் சந்தித்து பேசும் உச்சி மாநாடு வருகிற 26–ந் தேதி நடக்க இருப்பதாக ஜப்பான் அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுசபை கூட்டத்தின் இடையே இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஆப்பிரிக்க நாடான கானாவின் வடக்கு பகுதியில் கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து கரைபுரண்டோடுகிறது. மழை மற்றும் வெள்ளத்துக்கு இதுவரை 34 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் சைராகஸ் என்கிற நகரில் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு குடும்பத்தினரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 8 வயது சிறுமி உள்பட 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். துப்பாக்கிசூட்டை நடத்தியவர் யார்? காரணம் என்ன?  என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

* மியான்மரில் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் நிருபர்கள் இருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விரைவில் விடுவிக்க வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தி உள்ளார்.


Next Story