ஈரான் அரசு தூக்கி வீசப்படும் : டிரம்ப் வக்கீல் ஆவேசம்


ஈரான் அரசு தூக்கி வீசப்படும் : டிரம்ப் வக்கீல் ஆவேசம்
x
தினத்தந்தி 23 Sep 2018 11:30 PM GMT (Updated: 23 Sep 2018 7:49 PM GMT)

வல்லரசு நாடுகளுடன் ஈரான் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா சமீபத்தில் விலகியது.

நியூயார்க்,

ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்தது.

அதைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

ஈராக் அதிபர் சதாம் உசேனை வீழ்த்தியது போல அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை வீழ்த்துவோம் என ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் ஈரானுக்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் வக்கீல் ரூடி கியூலியானி கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி நியூயார்க்கில் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘‘ அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள், ஈரானுக்கு பொருளாதார கஷ்டங்களை கொடுத்துள்ளது. ஈரான் அரசு தூக்கி வீசப்படும்’’ என கூறினார்.

மேலும், ‘‘ ஈரான் அரசை நாங்கள் எப்போது தூக்கி வீசுவோம் என்பது எனக்கு தெரியாது. அடுத்த சில நாட்களிலேயோ அல்லது மாதங்களிலோ அல்லது ஒரு சில வருடங்களிலோ இது நடக்கலாம்’’ என கூறினார்.

இதற்கிடையே அமெரிக்கா மீது ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி மீண்டும் பாய்ந்துள்ளார். நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்படுவதற்கு முன்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ‘‘ஈரானில் பாதுகாப்பற்ற நிலைமையை உருவாக்குவதற்கு அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் அமெரிக்காவின் இந்த முயற்சி வெற்றி பெறாது. இந்த பிராந்தியத்தில் உள்ள சில சிறிய நாடுகள், அமெரிக்காவின் ஆதரவை பெற்றுள்ளன. அமெரிக்கா அந்த நாடுகளை தூண்டி விடுகிறது. அவர்களுக்கு தேவையான தகுதித்திறன்களையும் வழங்குகிறது’’ என குற்றம் சாட்டினார்.


Next Story