கென்யாவில் 7 மாத கர்ப்பமான காதலியை கொலை செய்த கவர்னர் கைது


கென்யாவில் 7 மாத கர்ப்பமான காதலியை கொலை செய்த கவர்னர் கைது
x
தினத்தந்தி 25 Sep 2018 10:49 AM GMT (Updated: 25 Sep 2018 10:49 AM GMT)

கென்யாவில் 7 மாத கர்ப்பமான காதலியை கொலை செய்த கவர்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


மிகோரி மாகாணத்தின் கவர்னராக உள்ள ஒகோத் ஒபாடா, காதலியும், கல்லூரி மாணவியுமான ஷாரோனை (26 வயது ) கொலை செய்ததில் கைது செய்யப்பட்டுள்ளார். ஷாரோன் செப்டம்பர் மாதம் 3-ம் தேதி காட்டுப்பகுதியில் கத்தி காயங்களுடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடைய வயிற்றிலிருந்த 7 மாத குழந்தையும் காயங்களுடன் உயிரிழந்தது என உள்ளூர் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஷாரோனின் உடலில் கழுத்து, அடிவயிற்றுப்பகுதி உள்பட 8 இடங்களில் கத்திக்குத்து காணப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தை அடுத்து அங்கு ஷாரோனுக்கு நீதி கோரி போராட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக போலீஸ் விசாரணையையும் தொடங்கியது. ஷாரோனின் காதலரான ஒகோத் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து அவரிடம் விசாரணையை தொடர்ந்தது. டிஎன்ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. ஷாரோனின் வயிற்றில் இருந்த சிசுவின் டிஎன்ஏ ஒகோத்துடன் ஒத்துப்போனது. இதனையடுத்து மேலும் தகவல்களை சேகரித்த போலீஸ் ஒகோத்தை கைது செய்துள்ளது. ஷாரோன் கர்ப்பமானதில் விருப்பம் இல்லாத ஒகோத் அவரை கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.

 இதற்கிடையே ஷாரோன் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலையில் ஒகோத்துக்கு உதவிசெய்த பாதுகாவலர்கள், உதவியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒகோத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீஸ் காவலுக்கு அனுப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story