ஒரே கிராமத்தில் வெவ்வேறு மொழி பேசும் ஆண்கள், பெண்கள்!


ஒரே கிராமத்தில் வெவ்வேறு மொழி பேசும் ஆண்கள், பெண்கள்!
x
தினத்தந்தி 29 Sep 2018 6:32 AM GMT (Updated: 29 Sep 2018 6:32 AM GMT)

நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு கிராமத்து ஆண்களும் பெண்களும் வெவ்வேறு மொழி பேசும் விசித்திரம் நிலவுகிறது.

விவசாயத்தைப் பிரதான தொழிலாக கொண்ட தெற்கு நைஜீரியாவில் உள்ள அந்த உபாங் சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் வெவ்வேறு மொழிகளை பேசுவதாகக் கூறுகின்றனர். இந்த வினோதமான வேறுபாட்டை கடவுள் அளித்த ஆசீர்வாதமாக அவர்கள் கருதுகின்றனர்.

ஆனால், ஆங்கில மோகம் அச்சமூகத்தின் இளைஞர் களிடைய அதிகரித்து வரும் நிலையில், தங்கள் மொழிகள் அழிந்துபோகும் என்ற அச்சமும் மூத்தவர்கள் மத்தியில் நிலவுகிறது.

உபாங் சமூக மொழியில் ஆண்கள் பேசும் வார்த்தைகளுக்கும் பெண்கள் பேசும் வார்த்தைகளுக்கும் வேறுபாடு இருக்கிறது.

உதாரணமாக, நைஜீரியாவின் பிரதான உணவான சேனைக்கிழங்குக்கு ஆண்கள் மொழியில் ‘இட்டாங்’ என்றும், பெண்கள் மொழியில் ‘இருய்’ என்றும் பெயர்.

உடையை ஆண்கள் மொழியில் ‘ங்கி’ என்றும், பெண்கள் மொழியில் ‘அரிகா’ என்றும் அழைக்கின்றனர்.

உபாங் சமூக ஆண், பெண் இரு மொழிகளிலும் வார்த்தைகள் வித்தியாசப்படுவது எத்தனை சதவீதம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ‘‘இது கிட்டத்தட்ட இரண்டு வித்தியாசமான அகராதிகளாகும்’’ என்று கூறுகிறார், இந்த சமூகத்தைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்ட சிசி.

‘‘ஆண்களும், பெண்களும் பொதுவாக பேசும் பல வார்த்தைகள் உள்ளன. ஆனால், அதேசமயத்தில் பாலினத்தைப் பொறுத்து முழுவதும் வேறுவிதமான வார்த்தைகளைப் பயன்படுத்தும் நிலையும் உள்ளது’’ என்கிறார் அவர்.

உதாரணமாக, அமெரிக்க ஆங்கிலத்துக்கும், இங்கிலாந்து ஆங்கிலத்துக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை விட அதிகளவிலான வேறுபாடு, உபாங் ஆண்கள், பெண்கள் மொழிகளுக்கு இடையே உள்ளதாகக் கூறுகிறார் சிசி.

ஆனால், இச்சமூக ஆண்களாலும் பெண்களாலும் எதிர்த் தரப்பினரின் மொழியை சரியாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆண் குழந்தைகள் தாங்கள் வளரும்வரை குறிப்பிட்ட காலத்தை தங்களது தாய் மற்றும் பெண்களுடன் செலவிடுவதால் அவர்களுக்கு பெண்களின் மொழி இயல்பாகவே தெரிய வாய்ப்பு உண்டாகிறது.

சிறுவர்களுக்கு பத்து வயதாகும்போது, அவர்கள் ஆண்களின் மொழியைப் பேசவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோலத்தான் பெண்களும்.

உபாங் மக்கள் தங்களது மொழிகளில் நிலவும் வேறுபாடு குறித்து மிகவும் பெருமை அடைவதுடன், அதை தங்களது தனித்துவத்தின் அடையாளமாகப் பார்க்கின்றனர். 

Next Story