ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்யும் நாடுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்: டிரம்ப் மிரட்டல்


ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்யும் நாடுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்: டிரம்ப் மிரட்டல்
x
தினத்தந்தி 11 Oct 2018 6:45 AM GMT (Updated: 11 Oct 2018 6:45 AM GMT)

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்யும் நாடுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று டொனால்டு டிரம்ப் மிரட்டலாக பேசினார்.

வாஷிங்டன்,

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட கையோடு, அந்நாட்டுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ளார். அந்நாட்டிடம் வர்த்தக உறவுகளை வைத்துள்ள நாடுகள் நவம்பர் 4 ஆம் தேதிக்குள், அதை முறித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். ஈரானிடம் இருந்து எண்ணய் கொள்முதல் செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் திகழ்கிறது. 

அமெரிக்காவின் பொருளாதார தடையால், ஈரானிடம் எண்ணைய் கொள்முதல் செய்யும் நாடுகள் அதனை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. இந்தியாவும் எத்தகைய முடிவு எடுக்கும் என்று உலக நாடுகள் உற்று நோக்கிய நிலையில், ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணைய் இறக்குமதி செய்யப்படும் என்று இந்தியா தெரிவித்தது. அமெரிக்காவின் பொருளாதார தடையை மீறி இந்தியா, இந்த முன்னெடுப்பை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. 

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் இந்தியா, சீனா உட்பட சில நாடுகள் ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது பற்றி கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த டிரம்ப்  “ நவம்பர் 4 ஆம் தேதிக்கு பிறகும் ஈரானிடம் இருந்து எண்ணைய் கொள்முதல் செய்யும் நாடுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என மிரட்டல் தொனியில் பதிலளித்தார். 

அமெரிக்காவின் பொருளாதார தடைகளை பொருட்படுத்தாத இந்தியா, வரும் மாதம் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று உறுதிப்படுத்தினார். இந்தியன் ஆயில் கார்பரேஷன், மற்றும் மங்களூர் ரிபைனரி பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெடு (MRPL) ஆகிய இரண்டு அரசு நிறுவனங்களும் ஈரானிடம் இருந்து 1.25 மில்லியன் டன் கச்சா எண்ணைய் இறக்குமதியை அடுத்த மாதம் செய்ய முடிவெடுத்துள்ளது. 

Next Story