தான்சானியா: ஆப்பிரிக்காவின் இளம் கோடீசுவரர் துப்பாக்கிமுனையில் கடத்தல்


தான்சானியா: ஆப்பிரிக்காவின் இளம் கோடீசுவரர் துப்பாக்கிமுனையில் கடத்தல்
x
தினத்தந்தி 12 Oct 2018 6:23 PM GMT (Updated: 12 Oct 2018 6:23 PM GMT)

தான்சானியாவில் ஆப்பிரிக்காவின் இளம் கோடீசுவரர் துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்டார்.

டொடோமா,

ஆப்பிரிக்காவின் மிக இளம் வயது கோடீசுவரர் என்ற சிறப்பை பெற்றிருப்பவர் முகமது தேவ்ஜி (வயது 43). இவர் தான்சானியா நாட்டின் பொருளாதார தலைநகரான டார் எஸ் சலாம் நகருக்கு சென்றிருந்தார்.

அவர் அங்குள்ள ஓட்டல் ஒன்றின் உடற்பயிற்சி கூடத்துக்கு போனபோது, மர்ம நபர்களால் துப்பாக்கிமுனையில் கடத்திச்செல்லப்பட்டார். அவரை கடத்திச்சென்றவர்கள் வெளிநாட்டினர் என தெரியவந்துள்ளது. அவரை கடத்திச்சென்றவர்கள் யார், அதன் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை.

இதுபற்றி அந்த நகர போலீஸ் கமி‌ஷனர் கூறும்போது, ‘‘ மர்ம நபர்கள் அந்த ஓட்டலுக்கு காரில் வந்துள்ளனர். அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் முகமது தேவ்ஜியை கடத்திக்கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு அப்போது பணியில் இருந்த ஓட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடத்துகிறோம்’’ என கூறினார்.

இந்த கடத்தலுக்கான காரணம் என்ன என்று உறுதியாக தெரியாவிட்டாலும்கூட, மிரட்டி பணம் பறிக்கத்தான் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என போலீஸ் சந்தேகிக்கிறது.

முகமது தேவ்ஜி, எம்.இ.டி.எல். குழும நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் 6 நாடுகளில் இயங்குகிறது. ‘போர்ப்ஸ்’ பத்திரிகை தகவல்படி அவரது சொத்து மதிப்பு 150 பில்லியன் டாலர் (சுமார் ரூ.11,250 கோடி) ஆகும். தனது சொத்துக்களில் பாதியை சமூக சேவைக்கு செலவிடப்போவதாக அவர் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தான்சானியா நாடாளுமன்றத்தில் 2 முறை அவர் எம்.பி.யாக பணியாற்றி உள்ளார்.


Next Story