பாகிஸ்தானில் 35 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடங்கியது


பாகிஸ்தானில் 35 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடங்கியது
x
தினத்தந்தி 14 Oct 2018 5:08 AM GMT (Updated: 14 Oct 2018 5:08 AM GMT)

பாகிஸ்தானில் 35 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கியது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தல்களில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் 5 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் வென்றார். இப்படி வெற்றி பெற்றவர்கள் ஒரு தொகுதியை வைத்துக்கொண்டு எஞ்சிய தொகுதிகளில் ராஜினாமா செய்தனர்.

அந்த வகையில் அங்கு மொத்தம் 35 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. அவற்றில் 11 தொகுதிகள் நாடாளுமன்ற தொகுதிகள் ஆகும். எஞ்சியவை மாகாண சட்டசபை தொகுதிகள் ஆகும்.

11 நாடாளுமன்ற தொகுதிகளில் 9 தொகுதிகள் பஞ்சாப் மாகாணத்திலும், சிந்து மற்றும் கைபர் பக்துங்வா மாகாணங்களில் தலா ஒரு தொகுதியும் உள்ளன. இடைத்தேர்தல் நடக்கிற 35 தொகுதிகளில் 641 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். இறுதியாக தற்போது 372 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்றைய இடைத்தேர்தலுக்காக பாகிஸ்தானில் 5 ஆயிரத்து 193 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 848 வாக்குச்சாவடிகள் மிகுந்த பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் வாக்கு பதிவு தொடங்கியது.  இன்று மாலை 5 மணிவரை வாக்கு பதிவு நடைபெறும்.  வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கும் மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என கூறப்படுகிறது.

Next Story