கத்தாரில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்தது, வெள்ளம்


கத்தாரில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்தது, வெள்ளம்
x
தினத்தந்தி 22 Oct 2018 9:49 AM GMT (Updated: 22 Oct 2018 9:49 AM GMT)

கத்தாரில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்ததால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.


தோஹா, 

கத்தாரில் கடந்த சனிக்கிழமையன்று ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டியதால் தோஹா உள்ளிட்ட பல்வேறு நகரங்களை வெள்ளம் சூழ்ந்தது. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, சாலைகளின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் தண்ணீரில் மிதந்தது. சுரங்கப்பாதைகளில் வெள்ள நீர் புகுந்தது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது, விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. கடைகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டது. 
 
அல்-ஜெசீரா செய்தி நிறுவனத்தின் வானிலை சிறப்பு நிருபர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “தோஹாவில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை சனிக்கிழமை ஒரேநாளில் பெய்திருக்கிறது. புறநகர் பகுதியான அபுஹாமரில் மட்டும் 60 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது. இங்கு ஆண்டுக்கு சராசரி மழையே 77 மி.மீ. மழைதான். ஏறக்குறைய ஒரு ஆண்டு பெய்ய வேண்டிய மழையின் பெரும்பகுதி ஒரேநாளில் கொட்டித் தீர்த்துள்ளது,” என தெரிவித்துள்ளார். மழை மற்றும் வெள்ளம் காரணமாக கத்தார் ஏர்வேசுக்கு சொந்தமான விமானங்கள் உள்பட பிற விமானங்கள் அண்டைய நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

“தோஹாவில் வானிலை மாற்றம் காரணமாக விமானங்கள் புறப்படும் மற்றும் வந்துசேருவதில் கால தாமதம் நேரிட்டது,” என கத்தார் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

Next Story