பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு-சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர்


பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது  மிகப் பெரிய தவறு-சவுதி அரேபிய  வெளியுறவுத் துறை அமைச்சர்
x
தினத்தந்தி 22 Oct 2018 11:27 AM GMT (Updated: 22 Oct 2018 11:27 AM GMT)

பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு என சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர் அதெல் அல் ஜூபிர் கூறி உள்ளார்.

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர், மாயமானார்.

அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வந்தது.

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார்.

இது ஒரு சர்வதேச கண்டனத்தைத் ஏற்படுத்தியதுடன்  மேற்கு நாடுகளுடனான உறவுகளுக்கு சவுதி அரேபியாவுக்கு நெருக்கடி அளித்தது. 
பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயமானது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டார். சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி போலீஸ் அதிகாரிகள் இஸ்தான்புல் துணைத்தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார் என சவுதி அரேபியா செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் அதெல் அல் ஜூபிர் தொலைக்காட்சியில் கூறும்போது, "ஜமால் மோசமான முறையில் கொல்லப்பட்டிருப்பது சர்வதேச அளவில் கண்டனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜமால் கொல்லப்பட்டிருப்பது மிகப் பெரிய தவறு. அவர் மரணத்துக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தான் உத்தரவிட்டார் என்பதை நான் மறுக்கிறேன்.

எங்களுடைய மூத்த புலனாய்வு அதிகாரிகளுக்கு ஜமாலின் கொலை குறித்து தெரியாது. ஜமாலின் உடல் எங்கு இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. ஜமாலின் கொலை தொடர்பாக நாங்கள் அனைத்து உண்மைகளையும் கண்டறிந்து குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்ய  உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

இந்த நிலையில் ஜமாலின் உடலை இஸ்தான்புல்லிலுள்ள பெல்கிரேட் வனப் பகுதியின் அருகே தேடும் பணியை துருக்கி அரசு மிக தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது. ஜமாலின் உடல் இவ்வனப் பகுதியில் இருக்க வாய்ப்பிருப்பதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர்களுக்கு எதிரான எந்த வன்முறைத் தாக்குதலையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஜமால் வழக்கில் நாங்கள் நம்பகத்தன்மையின் அடிப்படையில் எங்கள் முடிவை எடுப்போம் என்று பிரிட்டன், பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகள் சவுதியை எச்சரித்துள்ளன.

Next Story