உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 22 Oct 2018 10:11 PM GMT (Updated: 22 Oct 2018 10:11 PM GMT)

* பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய பொருட்கள் சிலவற்றை கிறிஸ்டி என்ற நிறுவனம் ஆன்லைன் மூலம் ஏலத்தில் விடுகிறது. இதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் சமர்ப்பித்த கட்டுரை ஒன்று சுமார் ரூ.1½ கோடி வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் செயல்பட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பொதுமக்களை கொலை செய்து, சிறுவர்களை கடத்தி செல்கின்றனர். இதைப்போல கடந்த 20-ந் தேதியும் பெனி நகருக்குள் புகுந்த அவர்கள், 13 பேரை சுட்டுக்கொன்று 10-க்கும் மேற்பட்ட சிறுவர்களை கடத்தி சென்றனர்.

* அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுவோரை ஆதரிப்பதாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில், ‘சட்டவிரோத குடியேறிகள் ஜனநாயக கட்சிக்கு ஒரு அவமானம். இப்போதே குடியுரிமை சட்டங்களை திருத்துங்கள்’ என கண்டனம் தெரிவித்துள்ளார்.

* ஆஸ்திரேலியாவில் ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் தேவாலயங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தவறியதற்காக பிரதமர் ஸ்காட் மோரிசன் நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

* இமயமலை மற்றும் எவரெஸ்ட் சிகரத்தில் மாசுபாட்டை தவிர்க்க கடும் நடவடிக்கைகளை எடுக்க சீனா முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக திபெத்தில் இருக்கும் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமில் மாசுக்களை அதிகரிக்கும் வாகனங்களுக்கு அடுத்த ஆண்டு முதல் தடை விதிக்க திட்டமிட்டு உள்ளது.

* கடந்த 2016-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான், ரஷியா இணைந்து ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் 3-வது கூட்டு ராணுவ பயிற்சிக்காக ரஷிய ராணுவ வீரர்கள் அடங்கிய குழு ஒன்று நேற்று இஸ்லாமாபாத் வந்து சேர்ந்தது.



Next Story