பத்திரிகையாளர் கொலையை திசை திருப்ப சவுதி அரேபியா நடத்திய நாடகம்


பத்திரிகையாளர் கொலையை திசை திருப்ப சவுதி அரேபியா நடத்திய நாடகம்
x
தினத்தந்தி 23 Oct 2018 7:20 AM GMT (Updated: 23 Oct 2018 7:20 AM GMT)

பத்திரிகையாளர் ஜமாலின் கொலையை மூடி மறைக்க சவுதி செய்த மோசமான செயல் வெளியாகியுள்ளது

இரண்டு வாரங்களுக்கு முன் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமாலின் கொலையை மூடி மறைக்க சவுதி செய்த மோசமான செயல் வெளியாகியுள்ளது. தூதரகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி  கேமராக்கள் சோதிக்கப்படும் என்பதை நன்கு அறிந்து, கொலையை திசை திருப்புவதற்காக ஒரு பெரிய நாடகம் நிகழ்த்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஜமாலைக் கொல்வதற்காக சவுதியிலிருந்து வந்ததாகக் கூறப்படும் 15 நபர்களில் ஒருவரை தூதரகத்திற்குள் வரவழைத்து அவருக்கு கொல்லப்பட்ட ஜமாலின் உடைகளை அணியச் செய்து அவருக்கு ஒட்டுத் தாடியும் அணிவித்து வேண்டுமென்றே தூதரகத்தின் பின் வாசல் வழியாக அனுப்பியுள்ளனர்.

அந்த நபர் தூதரகத்தின் பின் வாசல் வழியாக வெளியேறும் காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன.பார்ப்பவர்கள் ஜமால் தூதரகத்தை விட்டு வெளியேறி விட்டதாக நினைக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் காணப்படுபவர் முஸ்தபா அல் மதானி என்பவர். முஸ்தபா தூதரகத்தின் பின் பக்க வாசல் வழியாக வெளியேறுவதற்கு 4 மணி நேரத்திற்குமுன் அவர் தூதரகத்தின் முன் வாசல் வழியாக வெளிர் நீல நிற சட்டையும் அடர் நீல நிற முழுக்கால் சட்டையும் அணிந்து உள்ளே நுழைவதும் கெமராவில் பதிவாகியுள்ளது.

பின்னர் அதே நபர் ஜமாலைப் போலவே தோற்றமளிப்பதற்காக ஒட்டுத்தாடி அணிந்து, ஜமால் அணிந்திருந்த சாம்பல் நிற முழுக்கால்சட்டை, சட்டை மற்றும் அடர் நிற கோட் அணிந்து தூதரகத்தின் தனது கூட்டாளி ஒருவருடன் பின் வாசல் வழியாக வெளியேறுகிறார். ஆனால் அவர் தனது ஷூவை மட்டும் மாற்றவில்லை. பின்னர் பிரபல மசூதி ஒன்றிற்குள் செல்லும் முஸ்தபா , ஜமாலின் உடைகளை மாற்றி விட்டு தனது நீலமும் வெள்ளையுமான கோடு போட்ட சட்டையை அணிந்து கொண்டவராக வெளியே வருகிறார்.அவரும் அவரது கூட்டாளியும் ஜமாலின் உடைகளை குப்பையில் போட்டு விட்டு தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வருகின்றனர். பின்னர் விமான நிலையம் செல்கிறார் முஸ்தபா. ஆனால் கொலையை திசை திருப்புவதற்காக நடத்தப்பட்ட இந்த நாடகம், ஜமாலைக் கொன்றவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, நிச்சயம் ஏதோ ஏமாற்று வேலை நடந்திருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்துவிட்டது. 




Next Story