கசோகி படுகொலை; தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர்: சவூதி அரேபியா


கசோகி படுகொலை; தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர்:   சவூதி அரேபியா
x
தினத்தந்தி 23 Oct 2018 8:13 AM GMT (Updated: 23 Oct 2018 8:13 AM GMT)

பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலையில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர் என சவூதி அரேபிய வெளியுறவு துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

ஜகர்த்தா,

சவூதி அரேபிய மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோகி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர், மாயமானார்.

அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை முதலில் சவுதி அரேபியா மறுத்து வந்தது.

இந்நிலையில், இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார் என சவுதி அரேபியா செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன.

இதனை தொடர்ந்து அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி அடேல் அல் ஜூபெயிர் கூறும்பொழுது, ஜமால் கொல்லப்பட்டிருப்பது மிக பெரிய தவறு. அவர் மரணத்துக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தான் உத்தரவிட்டார் என்பதை நான் மறுக்கிறேன் என நேற்று கூறினார்.

ஜமாலின் உடலை இஸ்தான்புல்லிலுள்ள பெல்கிரேட் வன பகுதியில் தேடும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், அடேல் அல் ஜூபெயிர் இந்தோனேசியாவில் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கசோகி படுகொலையில் தெளிவான மற்றும் முழுமையான விசாரணை நடைபெறும் என்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.  உண்மை வெளியிடப்படும்.  தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஒருபொழுதும் நடைபெறாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன என்றும் அவர் உறுதி அளித்து உள்ளார்.

Next Story