சிங்கப்பூர் தேசிய கொடியின் கிழிந்த புகைப்படத்தினை முகநூலில் பதிவிட்ட இந்தியருக்கு போலீசார் கடும் எச்சரிக்கை


சிங்கப்பூர் தேசிய கொடியின் கிழிந்த புகைப்படத்தினை முகநூலில் பதிவிட்ட இந்தியருக்கு போலீசார் கடும் எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 Oct 2018 9:31 AM GMT (Updated: 24 Oct 2018 9:31 AM GMT)

இந்திய கொடி தெரியும் வகையில் கிழிந்த நிலையிலான சிங்கப்பூர் தேசிய கொடியை முகநூலில் பதிவிட்ட இந்தியருக்கு அந்நாட்டு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கப்பூர்,

இந்தியாவை சேர்ந்த நபர் அவிஜித் தாஸ் பட்நாயக் (வயது 44).  இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.  இவர் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று அங்குள்ள வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 14ந்தேதி இவர், டி சர்ட் ஒன்றில் இருந்த சிங்கப்பூர் தேசிய கொடி கிழிந்து அதன்கீழ் உள்ள இந்திய தேசிய கொடி தெரியும் புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு சிங்கப்பூர்வாசிகள் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  அதன்பின் அந்த புகைப்படம் அதில் இருந்து நீக்கப்பட்டது.  தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில் வங்கி பணியில் இருந்து அவர்  நீக்கப்பட்டார்.

இதுபற்றி போலீசார் தொடர்ந்து 2 மாதங்கள் விசாரணை மேற்கொண்டனர்.  அவர்கள் அட்டர்னி ஜெனரலுடன் ஆலோசனை நடத்தி பின் இந்தியருக்கு கடும் எச்சரிக்கை விடுவது என்ற முடிவுக்கு வந்தனர்.  இதன்படி அவருக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டது.

சிங்கப்பூர் ஆயுதம் மற்றும் கொடி மற்றும் தேசிய கீதம் விதிகளின்படி எந்த ஒரு நபரும் கொடியை அவமதிக்கும் வகையில் நடந்திட கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story