கொழும்பு நகரில் பதற்றம்; அதிரடிப் படை குவிப்பு அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது


கொழும்பு நகரில் பதற்றம்; அதிரடிப் படை குவிப்பு அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 30 Oct 2018 11:30 PM GMT (Updated: 30 Oct 2018 7:33 PM GMT)

அதிபர் சிறிசேனாவை கண்டித்து ரனில் விக்ரமசிங்கே கட்சி சார்பில் கொழும்பு நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதனால் கொழும்பு நகரில் பதற்றம் நிலவியதால் அதிரடிப்படை குவிக்கப்பட்டது.

கொழும்பு,

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இந்த மோதல் உச்சத்தை எட்டிய நிலையில் கடந்த வாரம், விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கிய சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராகவும் நியமித்தார்.

மேலும் ராஜபக்சே உடனடி பலப்பரீட்சையை தவிர்க்கும் விதமாக நாடாளுமன்றத்தை வருகிற 16–ந் தேதி வரை முடக்கியும் வைத்தார். ஆனால் இதற்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனால் இலங்கையில் அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

சிறிசேனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில் அதிபர் சிறிசேனாவின் நடவடிக்கையை கண்டித்து கொழும்பு நகரின் பல இடங்களில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சித் தொண்டர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பெருமளவில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிறிசேனாவின் உருவ பொம்மை ஊர்வலத்தில் சிலர் எடுத்து வந்து அதன் மீது கடுமையான தாக்குதலும் நடத்தினர்.

பிரதமர் மாளிகை முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டும் என்று முழக்கமிட்டனர். சிறிசேனா, பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.

பிரதமர் மாளிகையைச் சுற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் 2 ஆயிரம் போலீசார், 600 போக்குவரத்து போலீசார், 10 அதிரடிப்படை குழுக்களும் குவிக்கப்பட்டன. தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இதேபோல் இலங்கையின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டக்கோரியும், அதிபர் சிறிசேனாவை கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

முன்னதாக முன்னாள் நிதி மந்திரி மங்கள சமரவீரா கூறுகையில், ‘‘இலங்கை அரசியலமைப்பின் மீது அதிபர் சிறிசேனா தாக்குதல் நடத்தி உள்ளார். இதனை எதிர்த்து அனைவரும் போராட வேண்டும்’’ என்றார்.

கொழும்பு நகரில் பதற்றமான நிலை உருவாகி இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இலங்கையில் வசிக்கும் அமெரிக்கர்கள், குறிப்பாக கொழும்பு நகரில் வசிப்போர் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பிரதமர் மாளிகை, நகர மண்டபம், லிப்டன் சதுக்கம், விடுதலை சதுக்கம், நாடாளுமன்ற கட்டிடம் ஆகிய பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறக் கூடும் என்று கருதப்படுவதால் அப்பகுதிகளில் அமெரிக்கர்கள் செல்வதை தவிர்க்கவேண்டும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் 16 எம்.பி.க்களைக் கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை ராஜபக்சே நேற்று காலை சந்தித்து பேசினார். இருவரும் இலங்கையின் அரசியல் நிலவரம் குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நாடாளுமன்ற ஓட்டெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடுநிலை வகிக்குமாறு ராஜபக்சே கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த 4 எம்.பி.க்கள் ராஜபக்சே அணிக்கு தாவினர். மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டு அவர்கள் அணி மாறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரனில் விக்ரமசிங்கேவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. தங்கள் அணிக்கு மேலும் பல எம்.பி.க்கள் வருவார்கள் என்று ராஜபக்சே ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

225 எம்.பி.க்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.பி.க்கள் அணி மாறியது பற்றி விக்ரமசிங்கே நிருபர்களிடம் கூறுகையில், ‘‘4 பேரும் மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டு எதிர் அணிக்கு சென்று விட்டாலும் கூட என்னால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டும்படி 128 எம்.பி.க்கள் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

இந்த அரசியல் களேபரங்களுக்கு இடையே ராஜபக்சே பிரதமர் பதவியில் அதிகாரப்பூர்வமாக நேற்று தனது பணிகளை தொடங்கினார்.


Next Story