ஜமால் ஒரு ஆபத்தான இஸ்லாமியவாதி என சவுதி இளவரசர் கூறியதாக அமெரிக்கா ஊடகங்கள் தகவல்


ஜமால் ஒரு ஆபத்தான இஸ்லாமியவாதி  என சவுதி இளவரசர் கூறியதாக  அமெரிக்கா ஊடகங்கள் தகவல்
x
தினத்தந்தி 2 Nov 2018 11:16 AM GMT (Updated: 2 Nov 2018 11:16 AM GMT)

ஜமால் ஒரு ஆபத்தான இஸ்லாமியவாதி என்று சவுதி இளவரசர் சல்மான் அமெரிக்காவிடம் கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாஷிங்டன்

துருக்கியைச் சேர்ந்த ஹட்டிஸ் சென்ஜிஸ்ஸை, சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோகி திருமணம் செய்யவிருந்த நிலையில் இம்மாதத் தொடக்கத்தில் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்ற ஜமால் மாயமானார்.

இது தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது.

துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமாலின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் துருக்கி சமீபத்தில் குற்றம் சாட்டியது.

இதனைத் தொடர்ந்து ஜமால் கொல்லப்பட்டத்தை சவுதி ஒப்புக் கொண்டது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் சவுதிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஜமால் ஒரு ஆபத்தான இஸ்லாமியவாதி என்று சவுதி  இளவரசர் சல்மான் அமெரிக்காவிடம் கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் ஜமால் கொல்லப்பட்டதை  சவுதி ஒப்புக் கொள்வதற்கு முந்தைய இடைப்பட்ட காலத்தில் வெள்ளை மாளிகைக்கு தொலைபேசி வாயிலாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மருமகனான குலஷ்னரிடம் சவுதி இளவரசர் பேசியுள்ளார். அந்த உரையாடலில் ஜமால் ஆபத்தான இஸ்லாமியவாதி என்றும், அவர் முஸ்லிம் பிரதர்வுட் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் சவுதி இளவரசர் கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜமால் கொலை விவகாரத்தில் அமெரிக்கா - சவுதி இடையே உள்ள விரிசலை சரி செய்ய இந்த உரையாடலில் இளவரசர் முயன்றுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சவுதி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Next Story