பாகிஸ்தான்: சுப்ரீம் கோர்ட்டில் கிறிஸ்தவ பெண் விடுதலையை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் - இம்ரான்கான் அரசு தூண்டுதலா?


பாகிஸ்தான்: சுப்ரீம் கோர்ட்டில் கிறிஸ்தவ பெண் விடுதலையை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் - இம்ரான்கான் அரசு தூண்டுதலா?
x
தினத்தந்தி 2 Nov 2018 11:15 PM GMT (Updated: 2 Nov 2018 8:39 PM GMT)

கிறிஸ்தவ பெண்ணின் விடுதலையை எதிர்த்து, பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இம்ரான்கான் அரசு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் 5 குழந்தைகளின் தாயான ஆசியா பீவி (வயது 54) என்ற கிறிஸ்தவ பெண் மீது தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. லாகூர் ஐகோர்ட்டு அதை உறுதி செய்தது.

இதை எதிர்த்து ஆசியா பீவி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார், ஆசிப் சயீத் கோசா, மசார் ஆலம் மியான்கேல் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து, அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுதலை செய்து கடந்த 31-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு எதிராக அங்குள்ள மதவாத அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசியா பீவியின் உயிருக்கும் அச்சுறுத்தல்கள் உள்ளன. அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டாலும்கூட, உயிராபத்து காரணமாக முறைப்படி வெளியே விடப்படவில்லை. அவர் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

இதை அந்தப் பெண்ணின் சகோதரர் ஜேம்ஸ் மாசிஹ் உறுதி செய்தார். அந்தப் பெண்ணின் கணவர் தனது 5 குழந்தைகளுடன் இங்கிலாந்தில் வசித்து வந்தார். மனைவி வழக்கின் தீர்ப்புக்காக குழந்தைகளுடன் அவர் பாகிஸ்தான் வந்துள்ளார். மனைவியை அழைத்துச்சென்று விட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

இது பற்றி ஜேம்ஸ் மாசிஹ் கூறும்போது, “என் சகோதரியின் உயிருக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு இருக்காது. விரைவில் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர அவருக்கு வேறு வழி இல்லை” என்று கூறினார். ஆனால் ஆசியா பீவிக்கு கனடா தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இப்போது பிரான்சும், ஸ்பெயினும் அடைக்கலம் தர ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் அவர் எங்கு செல்வார் என்பதை அவரது சகோதரர் ஜேம்ஸ் மாசிஹ் கூறவில்லை. இந்த நிலையில், ஆசியா பீவி மீது தெய்வ நிந்தனை புகார் எழுப்பிய காரி முகமது சலாம், சுப்ரீம் கோர்ட்டில் ஆசியா பீவியின் விடுதலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை அவரது சார்பில் வக்கீல் குலாம் முஸ்தபா தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர், “ஆசியா பீவி வழக்கின் தீர்ப்பில் நீதிபரிபாலனத்தின் தரமும் இல்லை. இஸ்லாமிய விதிமுறைகளின் தரமும் இல்லை. எனவே தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்று கூறி உள்ளார்.

மேலும் ஆசியா பீவியை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுபவர்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆசியா பீவி வழக்கில் பாகிஸ்தானை ஆளும் இம்ரான்கான் அரசின் தூண்டுதல் காரணமாகத்தான் சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஒரு புகார் எழுந்துள்ளது.

இதற்கு அந்தக் கட்சி தனது இணையதளத்தில் மறுப்பு வெளியிட்டுள்ளது. அதில் அந்தக் கட்சி, “வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுவோரின் பட்டியலில் ஆசியா பீவியின் பெயரை சேர்க்க மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யும் எண்ணமும் அரசுக்கு இல்லை. சம்மந்தப்பட்ட நபர்தான் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அரசு எதுவும் செய்வதற்கு இல்லை” என கூறப்பட்டுள்ளது.


Next Story