ஈராக்: தொடர் குண்டுவெடிப்பு - ராணுவ வீரர் உள்பட 6 பேர் பலி


ஈராக்: தொடர் குண்டுவெடிப்பு - ராணுவ வீரர் உள்பட 6 பேர் பலி
x
தினத்தந்தி 5 Nov 2018 6:15 PM GMT (Updated: 5 Nov 2018 5:58 PM GMT)

ஈராக்கில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ராணுவ வீரர் உள்பட 6 பேர் பலியாயினர்.

பாக்தாத்,

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினர் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினர்.

பாக்தாத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஏடன் நகரில் பஸ் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பின் போது குண்டு வெடித்தது. இதில் ஒரு ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார். 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

அல்–சாகா நகரில் அரசு ஊழியர் ஒருவரின் காரில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்தனர். இதை அறியாமல் அவர் அந்த காரில் பயணித்த போது, குண்டுவெடித்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். சர்தார் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அதே போல் பாக்தாத்தின் வடகிழக்கு பகுதியில் அடுத்தடுத்து 2 பஸ்களில் குண்டு வெடித்ததில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை.




Next Story