பாக்.கிற்கு வழங்கப்படும் நிதி உதவியின் விபரங்களை வெளியிட சீனா மீண்டும் மறுப்பு


பாக்.கிற்கு வழங்கப்படும் நிதி உதவியின் விபரங்களை வெளியிட சீனா மீண்டும் மறுப்பு
x
தினத்தந்தி 8 Nov 2018 3:58 AM GMT (Updated: 8 Nov 2018 3:58 AM GMT)

பாகிஸ்தானுக்கு வழங்க தயாராக இருக்கும் நிதி உதவியின் விவரங்களை வெளியிட சீனா மீண்டும் மறுத்துள்ளது.

பெய்ஜிங், 

சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீன அதிபர் ஜி ஜிங்பிங் மற்றும் பிரதமர் லி கெகியாங் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது, கடுமையான கடன் நெருக்கடி மற்றும் நிதிப்பற்றாக்குறையில் இருந்து மீண்டு வர  உதவி அளிக்க வேண்டும் என்று இம்ரான் கான் கோரிக்கை விடுத்தார். 

பாகிஸ்தானுக்கு 600 கோடி டாலர் நிதியுதவி அளிக்க சவூதி அரேபியா ஒப்புக்கொண்டுள்ள நிலையில், சீனாவும் இதே தொகையை நிதியாக அளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த தகவலை உறுதி செய்ய சீன அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பாகிஸ்தானுக்குத் தேவையான நிதியுதவி அளிக்கப்படும் என்று மட்டும் அவர்கள் கூறி வந்தனர். இந்தச் சூழலில், சீனாவின் நிதியுதவி குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக பாகிஸ்தான் குழுவினர் வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் சீனா செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் நிதியுதவி குறித்த விவரங்களை சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங்கிடம் செய்தியாளர்கள்  கேட்டனர்.அதற்கு சுன்யிங் அளித்த பதிலில், சீனாவும், பாகிஸ்தானும்  நெருங்கிய கூட்டாளிகள். எங்களால் முடிந்த அளவுக்கு மிகச் சிறந்த நிதியுதவியை பாகிஸ்தானுக்கு வழங்குவோம்” என்று தெரிவித்தார். 

Next Story