பாகிஸ்தானில் மத நிந்தனை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசியா பிபி சிறையில் இருந்து விடுதலை


பாகிஸ்தானில் மத நிந்தனை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசியா பிபி சிறையில் இருந்து விடுதலை
x
தினத்தந்தி 8 Nov 2018 4:20 AM GMT (Updated: 8 Nov 2018 4:20 AM GMT)

பாகிஸ்தானில் மத நிந்தனை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசியா பிபி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

லாகூர், 

பாகிஸ்தானில் வசித்து வந்த ஆசியா பீபி (வயது 47) என்ற கிறிஸ்துவ பெண், இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த விவகாரத்தில் ஆசியா பீபி மீது மத நிந்தனை புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் ஆசியா பீபிக்கு 2010-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை லாகூர் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆசியா பீபி 2015-ஆம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இதனை விசாரித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆசியா பீவியை கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மதவாத அமைப்புகள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன.சாலைகளில் தடை அமைத்தும், டயர்களை கொளுத்தியும் அந்த அமைப்புகள் நடத்திய போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு பிறகு சிறையில் இருந்து ஆசியா பிபி விடுவிக்கப்பட்டார். ராவல்பிண்டியில்  உள்ள நூர் கான் விமான தளத்துக்கு அழைத்துச்செல்லப்படும் ஆசியா பிபி, அங்கிருந்து நெதர்லாந்து அழைத்துச்செல்லப்பட உள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 


Next Story