அமெரிக்க இசை விடுதியில் துப்பாக்கிச்சூடு - 13 பேர் பலி


அமெரிக்க இசை விடுதியில் துப்பாக்கிச்சூடு - 13 பேர் பலி
x
தினத்தந்தி 8 Nov 2018 11:00 PM GMT (Updated: 8 Nov 2018 9:16 PM GMT)

அமெரிக்க இசை விடுதியில் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாயினர்.


லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 40 மைல் தொலைவில் உள்ள தவுசண்ட் ஓக்ஸ் நகரில் ‘பார்டர்லைன் பார் அண்ட் கிரில்’ என்ற பெயரில் ஒரு இசை விடுதி இயங்கி வருகிறது.

அங்கு நேற்று முன்தினம் இரவு கல்லூரி மாணவர்களுக்கான இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் இளைய தலைமுறையினர் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இரவு சுமார் 11.40 மணிக்கு கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் அங்குள்ளவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் படை வரவழைக்கப்பட்டது.

ஆனால் அதற்குள் அவர் பலரை சுட்டு வீழ்த்தி விட்டார். இதில் 12 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் போலீஸ் அதிகாரி ஆவார். 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், இறந்து கிடந்தது தெரிய வந்தது. அவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டாரா அல்லது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா என தெரியவில்லை.

இது பயங்கரவாத தாக்குதலா என்பதுவும் உடனடியாக தெரிய வரவில்லை. இந்த சம்பவம், அமெரிக்காவை பதற்றத்துக்கு ஆளாக்கி இருக்கிறது.

இந்த தாக்குதல் குறித்து ஜனாதிபதி டிரம்புக்கு உயர் அதிகாரிகள் விளக்கினர். பலியானவர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.





Next Story