இங்கிலாந்தில் புதிய ‘பிரிக்ஸிட்’ மந்திரி ஸ்டீபன் பார்கிளே : வரைவு ஒப்பந்தத்தை நிறைவேற்ற தெரசா மே உறுதி


இங்கிலாந்தில் புதிய ‘பிரிக்ஸிட்’ மந்திரி ஸ்டீபன் பார்கிளே : வரைவு ஒப்பந்தத்தை நிறைவேற்ற தெரசா மே உறுதி
x
தினத்தந்தி 17 Nov 2018 11:15 PM GMT (Updated: 17 Nov 2018 7:45 PM GMT)

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக முடிவு எடுத்துள்ள இங்கிலாந்து, அது தொடர்பான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது.

லண்டன்,

ஆளுங்கட்சி மந்திரிகளிடையே  இது தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள வரைவு அறிக்கைக்கு அங்கு அதிருப்தி நிலவுகிறது. அந்த அதிருப்தியில், ‘பிரிக்ஸிட்’ என அழைக்கப்படுகிற அந்த நடவடிக்கையை கவனித்து வந்த மந்திரி டொமினிக் ராப், அந்த துறைக்கான ராஜாங்க மந்திரி சூயல்லா உள்பட 4 மந்திரிகள் அடுத்தடுத்து நேற்று முன்தினம் பதவி விலகினர். இதனால் பிரதமர் தெரசா மேவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அவர் இந்த வரைவு ஒப்பந்தத்தை நிறைவேற்ற உறுதி கொண்டிருப்பதாக எல்.பி.சி. வானொலிக்கு அளித்த பேட்டியில் திட்டவட்டமாக கூறினார்.

இந்த நிலையில் பிரிக்ஸிட் துறைக்கான புதிய மந்திரியாக ஸ்டீபன் பார்கிளேயை அவர் தேர்வு செய்துள்ளார். இவர் வடகிழக்கு கேம்பிரிட்ஜ்‌ஷயர் தொகுதியில் இருந்து இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். கடந்த ஜனவரி மாதம் முதல் இவர் சுகாதாரத்துறை மந்திரி பதவி வகித்து வந்தார். இப்போது அவர், பதவி விலகிய டொமினிக் ராப் இடத்துக்கு வந்துள்ளார்.

இதுபற்றி பிரதமர் இல்ல செய்தி தொடர்பாளர் சுட்டிக்காட்டுகையில், ‘‘ஸ்டீபன் பார்கிளே, பிரிக்ஸிட் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதை விட, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கு உள்நாட்டில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை கவனிப்பார்’’ என கூறினார்.

இந்தப் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பது குறித்து ஸ்டீபன் பார்கிளே கருத்து தெரிவிக்கையில், ‘‘பிரிக்ஸிட் பணிகளை கவனிக்க ஆர்வமுடன் உள்ளேன்’’ என குறிப்பிட்டார்.

இதற்கிடையே தெரசா மே கட்சியிலேயே அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவும் முயற்சி நடக்கிறது.


Next Story