உலக செய்திகள்

இலங்கை அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக சிறிசேனா நடத்திய அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்தது + "||" + All the meeting held by Sirisena ended in failure

இலங்கை அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக சிறிசேனா நடத்திய அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்தது

இலங்கை அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக சிறிசேனா நடத்திய அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்தது
இலங்கை அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக நேற்று அதிபர் சிறிசேனா நடத்திய அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்தது.

கொழும்பு,

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த மாதம் 26–ந் தேதி அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார். ஆனால் நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லாத நிலை இருந்தது.

எனவே நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர், அடுத்த ஆண்டு (2019) ஜனவரியில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார். ஆனால் அதிபரின் இந்த உத்தரவை நிறுத்தி வைத்த சுப்ரீம் கோர்ட்டு, பொதுத்தேர்தலுக்கான நடவடிக்கைகளை எடுக்கவும் தடை விதித்தது.

இதைத்தொடர்ந்து கடந்த வாரம் நாடாளுமன்றம் கூடியது. இதில் வரலாறு காணாத அளவுக்கு மோதல் ஏற்பட்டது. விக்ரமசிங்கே மற்றும் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டதுடன், நாற்காலி வீச்சு, மிளகாய் பொடி வீச்சு போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளும் அரங்கேறின.

இந்த களேபரங்களுக்கு மத்தியிலும் கடந்த 14 மற்றும் 16–ந் தேதிகளில் ராஜபக்சே அரசுக்கு எதிராக 2 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. எனினும் அந்த நாட்டு அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

இவ்வாறு 3 வாரங்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றை அதிபர் சிறிசேனா கூட்டினார். இதில் ரனில் விக்ரமசிங்கே, ராஜபக்சே மற்றும் அவர்களது கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்ட பின் சிறிசேனா, விக்ரமசிங்கே, ராஜபக்சே ஆகிய மூவரும் நேருக்குநேர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

எனினும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த இந்த கூட்டம், எவ்வித முடிவுகளும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

முன்னதாக இந்த கூட்டத்தை ரனில் ஆதரவு கட்சிகளில் ஒன்றான ஜனதா விமுக்தி பெரமுனா (மக்கள் விடுதலை முன்னணி) கட்சி புறக்கணித்தது. இது தொடர்பாக சிறிசேனாவுக்கு அந்த கட்சி எழுதியிருந்த கடிதத்தில், இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு காரணகர்த்தாவான அதிபரே, அதை தீர்க்க வேண்டும் என கூறியிருந்தது.

இதைப்போல சபாநாயகர் கரு ஜெயசூரியாவும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்தார்.