‘பத்திரிகையாளர் கொலையில், சவுதி இளவரசருக்கு பங்கு உண்டா, இல்லையா?’ - டிரம்புக்கு செனட் சபை கிடுக்கிப்பிடி


‘பத்திரிகையாளர் கொலையில், சவுதி இளவரசருக்கு பங்கு உண்டா, இல்லையா?’ - டிரம்புக்கு செனட் சபை கிடுக்கிப்பிடி
x
தினத்தந்தி 21 Nov 2018 11:00 PM GMT (Updated: 21 Nov 2018 7:05 PM GMT)

பத்திரிகையாளர் கொலையில், சவுதி இளவரசருக்கு பங்கு உண்டா, இல்லையா என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, செனட் சபை கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.

வாஷிங்டன்,

சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 60), துருக்கி நாட்டின் இஸ்தான்புல் சவுதி துணை தூதரகத்தில் வைத்து கடந்த மாதம் 2-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். சவுதியின் மன்னராட்சியையும், இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்து எழுதி வந்த அவரது படுகொலை, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் படுகொலை, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவின்பேரில்தான் நடந்துள்ளது என அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் சி.ஐ.ஏ. கூறியது.

நேற்று முன்தினம் இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து வெளியிட்டார். அப்போது கசோக்கி படுகொலையை இளவரசர் முகமது பின் சல்மான் நன்றாக அறிந்திருப்பார் என ஒப்புக்கொண்டார். ஆனால் தொடர்ந்து கூறும்போது, “ அவர் இதை செய்திருக்கலாம் அல்லது செய்யாமலும் இருக்கலாம்” என்றும் குறிப்பிட்டார்.

பின்னர் அவர் கூறும்போது, “கசோக்கி படுகொலையில் சி.ஐ.ஏ. 100 சதவீதம் உறுதியாக கூறவில்லை” என்றார்.

இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை வெளியுறவுத்துறை கமிட்டி, டிரம்புக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.

கசோக்கி படுகொலையில் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு பங்கு உண்டா, இல்லையா என்பதை டிரம்ப் கூற வேண்டும் என்று அந்த கமிட்டியின் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி தலைவர்களான பாப் கார்க்கரும், பாப் மெனன்டசும் கூறி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் குளோபல் மேக்னிட்ஸ்கை மனித உரிமை பொறுப்புடைமை சட்டத்தின்படி டிரம்புக்கு முறைப்படி கூறி உள்ளனர். இதில் டிரம்ப் 120 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story