காதலனை கொன்று துண்டு துண்டாக வெட்டி பிரியாணி செய்த காதலி


காதலனை கொன்று துண்டு துண்டாக வெட்டி பிரியாணி செய்த காதலி
x
தினத்தந்தி 22 Nov 2018 12:37 PM GMT (Updated: 22 Nov 2018 12:37 PM GMT)

காதலனை கொன்று உடலை வெட்டி பிரியாணி செய்து தொழிலாளர்களுக்கு ஒரு பெண் பரிமாறி உள்ளார். போலீசார் அவரை கைது செய்து உள்ளனர்.

7 ஆண்டுகளாகக் காதலித்த காதலனைக் கொன்ற காதலி அவரின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குப் பரிமாறியுள்ளார். தீவிர புலன் விசாரணையில் 6 மாதங்களுக்குப் பின் போலீசில் சிக்கியுள்ளார்.

இந்த சம்பவம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துள்ளது என்று அந்நாட்டில் வெளிவரும் ’தி நேஷனல்’ எனும் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அபுதாபி போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:

 மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் அபுதாபியில் பணியாற்றி வந்தார். அங்கு அந்த  நாட்டைச் சேர்ந்தவரை 7 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன், திடீர் என்று அவரது  காதலன்  தான் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறி உள்ளார். 

இதனால் கோபம் அடைந்த அந்த பெண் காதலனை வரவழைத்து மயக்கி கொலை செய்துள்ளார். கோபம் அடங்காத அந்த பெண் தனது காதலனின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, அதை பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாரம்பரிய உணவான ’மச்பூஸ்’ (ஒருவகை பிரியாணி) எனும் பிரியாணியாக  சமைத்துப் பரிமாறியுள்ளார்.

இந்நிலையில் கொல்லப்பட்ட அந்த இளைஞரின் சகோதரர் போலீஸில் புகார் செய்துள்ளார்.   கடந்த 6 மாதங்களாகத் தனது சகோதரரை போலீஸாரின் உதவியுடன் தேடி வந்துள்ளார். இதில் தனது சகோதரரின் காதலியின் பழைய வீட்டுக்குச் சென்று போலீஸாரின் உதவியுடன் சோதனை  செய்ததில் மனித  பற்கள் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து, அந்தப் பற்களை போலீஸார் டிஎன்ஏ ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். அந்த ஆய்வின் முடிவில் கொல்லப்பட்டது தேடப்பட்டு வந்த அந்தப் பெண்ணின் காதலர் என்பதை  உறுதி செய்தனர். இதையடுத்து அந்த பெண்ணைக் கண்டுபிடித்த போலீஸார் 20-ம் தேதி கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில், தன்னைக் காதலித்து ஏமாற்றியதால் தனது காதலனை 6 மாதங்களுக்கு முன் கொலை செய்தேன் என்று தெரிவித்தார். மேலும் உடலை வெட்டி பிரியாணி சமைத்துப் பரிமாறினேன் என்றும், மீதமிருந்த உடல் பாகங்களை நாய்க்கு உணவாக அளித்தேன் என்றும் தனக்கு உதவியாக ஒருவர் இருந்தார் என்றும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தைக் கேட்ட போலீஸார் அதிர்ந்து விட்டனர்.

Next Story