சிரியாவில் நச்சு வாயு தாக்குதல்; 107 பேர் மூச்சு திணறலால் அவதி


சிரியாவில் நச்சு வாயு தாக்குதல்; 107 பேர் மூச்சு திணறலால் அவதி
x
தினத்தந்தி 25 Nov 2018 10:27 AM GMT (Updated: 25 Nov 2018 10:27 AM GMT)

சிரியாவில் நச்சு வாயு தாக்குதலில் 107 பேர் மூச்சு திணறலால் அவதியடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

அலெப்போ,

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 7வது ஆண்டாக நடந்து கொண்டு இருக்கிறது.  இந்த போரால் குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் பலியாகி உள்ளனர்.

அரசுக்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகளும் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களை ஒழிக்க சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்யா உள்ளிட்ட படையினரும் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த சிரியாவின் அலெப்போ நகரில் குளோரின் என்ற ரசாயனம் நிரப்பப்பட்ட வெடிகுண்டுகளை கொண்டு தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனால் வெடிகுண்டு தாக்குதலுடன் பொதுமக்களுக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டு உயிரிழப்பினை ஏற்படுத்தியது.  இதில், 9 பேர் பலியானார்கள்.  20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுபற்றி அலெப்போ ஆளுநர் உசைன் தியாப் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்த தீவிரவாத சம்பவத்தில் அதிக அளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இந்த தாக்குதலால் தீவிரவாதிகளிடம் ரசாயன ஆயுதங்கள் உள்ளன என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அந்நாட்டில் இருந்து வெளிவரும் சனா என்ற ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியொன்றில், அலெப்போ நகரில் மூச்சு திணறலால் 107 பேர் அவதிப்பட்டு வருகின்றனர்.  அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள தகவலில், மொத்தம் 94 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து திருப்பி அனுப்பப்பட்டு விட்டனர்.  மீதமுள்ள 31 பேரும் ஆபத்தினை கடந்துவிட்டனர் என தெரிவித்துள்ளது.

Next Story