மும்பை தாக்குதல் குற்றவாளிகள் குறித்து தகவல்கள் அளிப்பவர்களுக்கு ரூ.35 கோடி பரிசு அமெரிக்கா அறிவிப்பு


மும்பை தாக்குதல் குற்றவாளிகள் குறித்து தகவல்கள் அளிப்பவர்களுக்கு ரூ.35 கோடி பரிசு அமெரிக்கா அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Nov 2018 6:09 AM GMT (Updated: 26 Nov 2018 6:09 AM GMT)

மும்பை தாக்குதல் 10 ஆண்டு நினைவு நாளில் குற்றவாளிகளைப் பற்றிய தகவல்கள் அளிப்பவர்களுக்கு ரூ.35 கோடி பரிசு என அமெரிக்கா அறிவித்து உள்ளது.

வாஷிங்டன்

2008 நவம்பர் 26... 

மீனவர்களைப் போல இரு படகுகளில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், மும்பையின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரிந்து சென்றனர்.

இரவு 9.30 மணி சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம்...

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கு வந்த தீவிரவாதிகள் கசாப், இஸ்மாயில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் அதே இடத்தில் 58 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர்.

104 பேர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினர். அங்கிருந்து காமா மருத்துவமனை நோக்கி சென்ற தீவிரவாதிகளைத் தடுக்க முயன்ற, மும்பை காவல் அதிகாரிகளான ஹேமந்த் கார்கரே, அசோக் காம்தே, விஜய் சலாஸ்கர் ஆகியோரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவம் நடந்த சற்றுநேரத்தில்...

கொலாபா, நரிமண் பாயிண்ட், கேட்வே ஆஃப் இந்தியா என அடுத்தடுத்து  தாக்குதல்கள் நடந்தேறின. தாஜ் ஹோட்டலில் 31 பேரையும், ஓபராய் விடுதியில் 30 பேரையும், மற்ற இடங்களில் 40-க்கும் மேற்பட்டோரையும் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர்.

எங்கே என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே கடும் உயிர்சேதத்தை விளைவித்துவிட்டனர் தீவிரவாதிகள். தாஜ் ஓட்டல், ஓபராய் விடுதி ஆகியவற்றில் நூற்றுக்கணக்கானோர் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்ததால், கமாண்டோ படையினர் சமயோசிதமாக செயல்பட்டு தீவிரவாதிகளை வேட்டையாடி 400-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை விடுவித்தனர்.

கொலாபாவில் உள்ள யூத மையத்தில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்களை விடுவிக்க கமாண்டோ படை வீரர்கள் சாகசத்துடன் செயல்பட்டனர். ஹெலிகாப்டரில் இருந்து கயிற்றில் இறங்கிய அவர்கள் 2 தீவிரவாதிகளை வீழ்த்தி 9 பேரை மீட்டனர்.

2008 நவம்பர் 29...

மூன்று நாட்கள் நீடித்த இந்த தாக்குதல் 29-ம் தேதி முடிவுக்கு வந்தது. 166 பேர் உயிரிழப்புக்கு காரணமான இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பு பொறுப்பேற்றாலும், தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக கஸாப் தெரிவித்தான்.

உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதியான அஜ்மல் கசாப்பை முன்வைத்து நீண்ட விசாரணை நடத்தப்பட்டது. அவன் மீது 29 பிப்ரவரி 2009 குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் அவனுக்கு கடந்த 2012-ம் ஆண்டு  நவம்பர் 21 மரணதண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மும்பை தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் ஆகியும், உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இது தொடர்பாக கடந்த இருவாரங்களுக்கு முன் பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றிருந்தபோது, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸை சந்தித்து இதுதொடர்பாகப் பேசினார். அப்போது விரைவில் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்பட்டது. இந்தப் பேச்சின் முடிவில் அமெரிக்கா இந்த வெகுமதியை அறிவித்துள்ளது.

மும்பை தாக்குதல் நடந்து இன்றுடன் 10 ஆண்டு நிறைவு ஆகிறது.  பயங்கரவாத தாக்குதலின் 10-வது ஆண்டு நினைவு நாளில் அமெரிக்கா  $ 5 மில்லியன் டாலர் பரிசு அறிவித்துள்ளது (ரூ. 35 கோடிக்கு மேல்).

2008 மும்பை தாக்குதலுக்கு  சதி செய்தது, உதவியது  உள்பட தண்டனைக்கு வழிவகுக்கும் தகவலை தருபவர்களுக்கு அமெரிக்க $ 5 மில்லியன் பரிசு வழங்கப்படும் என அறிவித்து உள்ளது.

டிரம்ப் நிர்வாகம் இத்தாக்குதலின் 10-வது ஆண்டு நினைவு நாளில்  இந்த பெரிய வெகுமதியை அறிவித்து உள்ளது.

குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டு வருமாறு சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றவும்  அமெரிக்கா உறுதியளித்துள்ளது. திங்களன்று நீதித்துறை (RFJ) திட்டத்தின் மாநிலத் துறை இந்த பரிசை அறிவித்து உள்ளது.  எந்தவொரு நாட்டிலும்  கைது அல்லது தண்டனைக்கு வழிவகுக்கும் தகவல் அளிப்பவர்களுக்கு  $ 5 மில்லியனுக்கும் மேலான பரிசு அளிக்கப்படும் என அறிவித்து உள்ளது.

லஷ்கர் இ தொய்பா நிறுவனர் ஹபிஸ் முகமது சயீத் மற்றும் ஹாபிஸ் அப்துல் ரஹ்மான் மக்கி, மற்றொரு மூத்த  தலைவர் குறித்த தகவல் தருபவர்களுக்கு ஏற்கனவே ஏப்ரல்  2012 ஆண்டு இதே துறை  அறிவித்து இருந்தது.

இந்ததிட்டத்திற்கான வெகுமதிகள் ( நிதி ) அமெரிக்க அரசுத் திணைக்களத்தின்  தூதரக  பாதுகாப்பு சேவை மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. 1984 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து, $ 150 மில்லியனுக்கும் மேலாக 100-க்கும் அதிகமான மக்களுக்கு இந்த பரிசு  வழங்கபட்டு உள்ளது.  பயங்கரவாதத்தை நீதிக்கு முன்  கொண்டு வர இது போன்ற வெகுமதிகள் உதவியது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

மும்பை தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை. உண்மைக் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. இந்தத் தாக்குதலுக்கு காரணமான இருக்கும் குறிப்பாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் மீது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் விதித்த தடையை தீவிரமாகச் செயல்படுத்த அனைத்து நாடுகளுக்கும் கோரியுள்ளோம். குறிப்பாக பாகிஸ்தானுக்கு இதை வலியுறுத்துகிறோம். சர்வதேச நாடுகளுடன் இணைந்து, மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்து நீதிமுன் நிறுத்த அனைத்து விதமான உதவிகளும் வழங்கப்படும்.

மும்பை தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்ளிட்ட 166 பேர் கொல்லப்பட்டார்கள். அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம்.

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்தோ அல்லது சதித்திட்டம் தீட்டியவர்கள் குறித்தோ அல்லது உதவியவர்கள் குறித்தோ தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.35 கோடி (50 லட்சம் டாலர்கள்) வெகுமதி அளிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story