மும்பை தாக்குதல்: காலில் துப்பாக்கி சூடு அடைந்து கசாப்புக்கு எதிராக சாட்சியமளித்த 9 வயது சிறுமி!


மும்பை தாக்குதல்: காலில் துப்பாக்கி சூடு அடைந்து கசாப்புக்கு எதிராக சாட்சியமளித்த 9 வயது சிறுமி!
x
தினத்தந்தி 26 Nov 2018 11:05 AM GMT (Updated: 26 Nov 2018 11:05 AM GMT)

“பயங்கரவாதத்திற்கு எதிராக துணிச்சலாக நிற்பேன், சரியான செயலை செய்வதற்கு ஒருபோதும் தயங்கமாட்டேன்,” என்கிறார் தேவிகா ரோதாவான்.

மும்பை மாநகரில், 2008–ம் ஆண்டு, நவம்பர் 26–ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் நுழைந்து, 10–க்கும் மேற்பட்ட இடங்களில் அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல்களை, பாகிஸ்தானில் இருந்து கொண்டு மூளையாக செயல்பட்டு வழிநடத்தியவன், சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் ஆவான். அவன் இன்னும் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றுகிறான். இன்று மும்பையில் தாக்குதல் நடத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. தாக்குதலால் ஏற்பட்ட காயம் இன்னும் ஆறவில்லை. பல்வேறு குடும்பங்களை வேதனையில் ஆழ்த்திய இந்த தாக்குதலில் உயிருடன் சிக்கிய பயங்கரவாதி ஒருவன் மட்டும்தான். அவன் தான் அஜ்மல் கசாப். அவனை தூக்கிலிட உதவியாக இருந்தது தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுமி தேவிகாவின் வாக்குமூலம். 

மும்பை ரெயில் நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அதில் சிக்கிக்கொண்டார் சிறுமி தேவிகா. பயங்கரமான தாக்குதலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தவர்களில் இவரும் ஒருவர். சத்ரபதி சிவாஜி ரயில்நிலையத்தில் பயங்கரவாதி கசாப் சுட்டதில் இவரது காலில் குண்டுபாய்ந்தது. இதன்பின்னர் சிகிச்சையின் பலனாக உயிர் பிழைத்தார். பாதுகாப்பு காரணமாக அவருடைய பெயர் மற்றும் புகைப்படங்கள் வெளியாகவில்லை.

ரெயில் நிலையத்தில் பயங்கரவாதிகளை நேரில் பார்த்த ஒரே சாட்சி தேவிகா. நீதிமன்றத்தில் கசாப் தன்னை சுட்டார் என்று இவர் அளித்த வாக்குமூலமே, தூக்கு தண்டனையை வழங்க எளிதாக இருந்தது. வழக்கு விசாரணை நடைபெற்ற போது அரசு வழக்குரைஞர் இவரது பெயரைக் குறிப்பிடாமல் கசாப்பின் சாட்சியம் என்பதை கசாப் + மகள் (பெண்) என்று அடைமொழியில் அழைத்தனர். இதுவே அவரை கசாப்பின் மகளாக மாற்றியுள்ளது. இப்போது 19 வயதாகும் தேவிகா என்னுடைய வாழ்நாளில் அன்று நடைபெற்றதை ஒருபோதும் மறக்க முடியாது, மறக்க நினைத்தாலும் அதற்கான வாய்ப்பு கிடையாது. எப்போது கேட்டாலும் ஒவ்வொன்றாக பதிவு செய்வேன் என்கிறார்.  

கசாப்பிற்கு எதிராக சாட்சியம் சொன்னதால் பள்ளி பருவத்தில் நேரிட்டதை அவர் விளக்குகையில், கசாப்புக்கு எதிராக சாட்சியம் சொல்வது குறித்து எனது பள்ளியில் தெரிந்ததால் என்னுடன் பேசுவதில் நண்பர்கள் தயக்கம் காட்டினர். அவர்களுக்கு இன்னல் ஏற்படுமோ எனபயம் கொண்டனர். என்னுடன் யாரும் விளையாட மாட்டார்கள் என்கிறார். அரசு நிவாரணத்திலும் அவருக்கு சோகம்தான் கிடைத்தது.  சம்பவத்தின் போது அரசு அறிவித்த வீடு உள்ளிட்ட எந்த சலுகையும் இதுவரை தனக்குக் கிட்டவில்லை என்று கூறும் அவர், இப்போது மாதம் 10 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்துதான் இருக்கிறேன் என கூறியுள்ளார். மருத்துவ சிகிச்சைக்கு தாஜ் ஓட்டல் உதவியதாக கூறும் அவர், இப்போது தனக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகளைக் கூட கேட்கவில்லை.

“நான் சரியானதை செய்துள்ளேன். என்னுடைய தேசத்திற்காக சிறிய உதவியை செய்துள்ளேன். பயங்கரவாதத்திற்கு எதிராக துணிச்சலாக நிற்பேன், சரியான செயலை செய்வதற்கு ஒருபோதும் தயங்கமாட்டேன்,” என்கிறார். 

பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கசாப் போன்றவர்கள் சிறிய மீன்கள். அவனைப் பிடித்துவிட்டால் கடல் சுத்தமாகிவிடாது. பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

Next Story