நோய்க்கிருமிகளால் தாக்கப்பட்ட எறும்புகள் மற்ற எறும்புகளை விட்டு விலகி உள்ளன ஆய்வில் தகவல்


நோய்க்கிருமிகளால் தாக்கப்பட்ட எறும்புகள் மற்ற எறும்புகளை விட்டு விலகி உள்ளன ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 26 Nov 2018 1:10 PM GMT (Updated: 26 Nov 2018 1:10 PM GMT)

நோய்க்கிருமிகளால் தாக்கப்பட்ட எறும்புகள் மற்ற எறும்புகளை விட்டு விலகி இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் பயங்கர நோய்க்கிருமிகளால் தாக்கப்பட்ட எறும்புகள், பிற எறும்புகளின் நலன் கருதி எறும்புப் புற்றுக்குள் வராமல் வெளியே தங்கி, மற்ற எறும்புகளை விட்டு விலகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களுக்கு எளிதில் தொற்றக்கூடிய ஜலதோஷம் போன்ற தொற்றுகள் ஏற்பட்டால்கூட, பலர் மற்றவர்களுக்கு தொற்றிவிடும் என்னும் எண்ணம் கொஞ்சமுமின்றி பொது இடங்களில் நடமாடும் நிலையில், அறிவில் குறைந்த எறும்புகள் மனிதர்களைவிட நாகரீகமாக நடந்து கொள்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் எறும்புகளிடம் கற்றுக் கொள்ளவேண்டும் போலிருக்கிறது. லாசன்னே பல்கலைக்கழகத்தில் நாதலி ஸ்டோய்மிட்  என்பவர் தலைமையில் ஒரு குழு நடத்திய ஆய்வு ஒன்றில், கரும்பு  தோட்ட எறும்புகள், நோய்த்தொற்று ஏற்படும்போது தங்கள் கூட்டத்தை விட்டு விலகியிருக்க வேண்டியது அவசியம் என்பதை புரிந்து கொண்டுள்ளதுபோல் தெரிகிறது.

வெளியில் சென்று உணவு தேடும் எறும்புகள் சில, ஒரு நச்சுத்தன்மையுள்ள பூஞ்சைக்காளானால் நோய்த்தொற்றுக்காளாகும்போது, ஒரே நாளில் அவை மற்ற எறும்புகளிலிருந்து தங்களை தூர விலக்கிக் கொள்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

அவை தங்கள் வழக்கத்தை மாற்றிக்கொண்டு அதிக நேரம் புற்றுக்கு வெளியே இருப்பதன்மூலம், மற்ற எறும்புகளுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்கின்றன. அதே நேரத்தில் குட்டி எறும்புகளுக்கு உணவளித்து வளர்க்கும் நர்ஸ் எறும்புகள், குட்டி எறும்புகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் காப்பாற்றுவதற்காக கூட்டின் உள், வெகு தொலைவில் அவற்றை பாதுகாப்பாக கொண்டு சென்று விடுகின்றன.

தங்கள் மீது பூஞ்சைக் காளான் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை எறும்புகள் எவ்வாறு கண்டுபிடிக்கின்றன என்பதை அறிவதற்கு மேற்கொண்டு ஆய்வுகள் செய்யப்பட வேண்டியுள்ளது என்றாலும், ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது.

அந்த எறும்புகளின் நடத்தை நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பைக் குறைப்பதோடு, மற்ற வேலைக்கார எறும்புகளையும், ராணி எறும்பையும் நோயிலிருந்து காக்கிறது என்பது தான் அது.

ஒரு சமுதாயமாக வாழும் எறும்புகள் கூட்டத்தில், மற்ற எறும்புகள் நலனுக்காக தனிப்பட்ட எறும்புகள் நடவடிக்கை எடுப்பதும், தேவை ஏற்படும்போது அதற்கேற்றாற்போல் நடந்துகொண்டு, சுற்றுச்சூழலால் ஏற்படும் அபாயங்களுக்கு தப்பி வாழும் முறைகளைப் பின்பற்றுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Next Story