துபாயில் ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கிய கப்பல் : 7 ஊழியர்கள் உயிருடன் மீட்பு


துபாயில் ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கிய கப்பல் : 7 ஊழியர்கள் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 27 Nov 2018 1:47 AM GMT (Updated: 27 Nov 2018 1:47 AM GMT)

துபாயில் ராட்சத அலையில் சிக்கி கடலில் கப்பல் மூழ்கியது. கப்பலில் இருந்த 7 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

துபாய், 

அமீரகத்தில் அரேபிய கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 2 நாட்களாக வானிலையில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. 

மேலும் தேசிய வானிலை ஆய்வு மையம் கடலில் 12 அடி வரை அலைகள் உயரக்கூடும் என எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்த நிலையில் நேற்று கடலில் பயணம் செய்து கொண்டு இருந்த கப்பலில் இருந்து உதவி வேண்டி போலீஸ் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் ராட்சத அலைகளில் சிக்கியதால் கப்பல் பழுதாகி கடலில் மூழ்கி கொண்டு இருப்பதாக தகவல் அனுப்பினர்.

இதைதொடர்ந்து அந்த கப்பல் எங்கு உள்ளது என கடலோர மீட்பு குழுவினர் வேட்டையில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட கப்பலில் ஜி.பி.எஸ். கருவி எதுவும் பொருத்தப்படாத காரணத்தால் அவர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கடலில் மூழ்கி கொண்டு இருந்த கப்பலை கண்டுபிடித்தனர். அப்போது கப்பலில் சிக்கிக்கொண்டு இருந்த 5 பேரை உயிருடன் பத்திரமாக படகுகளில் மீட்டனர். மேலும் கப்பலில் இருந்து கடலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 2 பேரையும் கடலோர மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் கப்பல் ஊழியர்கள் 7 பேரையும் கடலோர மீட்பு குழுவினர் கரைக்கு கொண்டு வந்தனர். உடனே அவர்களை சிகிச்சைக்காக ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடலில் மூழ்கி கொண்டு இருந்த கப்பலையும் கயிறு கட்டி துறைமுக போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.


Next Story