ஜி-20 உச்சி மாநாட்டின் இடையே நடக்கிறது : அமெரிக்க அதிபர் டிரம்புடன் மோடி சந்திப்பு


ஜி-20 உச்சி மாநாட்டின் இடையே நடக்கிறது : அமெரிக்க அதிபர் டிரம்புடன் மோடி சந்திப்பு
x
தினத்தந்தி 29 Nov 2018 12:00 AM GMT (Updated: 28 Nov 2018 7:57 PM GMT)

அர்ஜென்டினா நாட்டில் ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே ஆகியோர் ஒன்றாக சந்தித்து பேசுகின்றனர்.

வாஷிங்டன்,

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா உள்ளிட்ட 19 மிகப்பெரிய பொருளாதார நாடுகள் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவற்றை கொண்டது ‘ஜி-20’ குழு.

இதன் உச்சி மாநாடு, அர்ஜென்டினா நாட்டின் தலைநகரமான பியுனோஸ் அயர்ஸ் நகரில் நாளை (30-ந் தேதி) தொடங்குகிறது. டிசம்பர் 1-ந் தேதி நிறைவு பெறுகிறது. இதில் ‘ஜி’-20 குழுவில் இடம் பெற்றுள்ள அனைத்து நாடுகளின் தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று பியுனோஸ் அயர்ஸ் புறப்பட்டு சென்றார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில் அவர், “உலகளவில் முன்னணியில் உள்ள பொருளாதார நாடுகள் இடையே நல்லதொரு ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு ஜி-20 மிகச்சிறப்பான முயற்சியை எடுத்துள்ளது. உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கும், வளத்துக்கும் இந்தியா முக்கிய பங்களிப்பு செய்துள்ளது. நியாயமான, நிலையான வளர்ச்சிக்கு ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த உச்சி மாநாட்டின் மையப்பொருளாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த உச்சி மாநாடு, உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரணம், வர்த்தகப்போரில் ஈடுபட்டு இருப்பதுடன், தென் சீனக்கடல் விவகாரத்தில் மோதிக்கொள்ளும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் ஒன்றாக சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. இதே போன்று உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிற நிலையில் அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதினை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்திக்கக்கூடும்.

இந்தியாவுக்கும் இந்த மாநாடு, முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது.

இந்த மாநாட்டின் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி முத்தரப்பு சந்திப்பு நடத்துகிறார்.

இதை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் உறுதி செய்துள்ளார்.

இதுபற்றி அவர் நிருபர்களிடம் பேசுகையில், “ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை ஜனாதிபதி டிரம்ப் சந்தித்து பேசுகிறார். பின்னர் இவ்விரு தலைவர்களும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கூட்டாக சந்திக்கிறார்கள்” என்று கூறினார்.

மேலும், மோடி, டிரம்ப், ஷின்ஜோ அபே ஆகிய 3 தலைவர்களுக்கு இடையேயான முத்தரப்பு கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் இது முதல் முத்தரப்பு சந்திப்பாகவும் அமைந்துள்ளது. இந்த சந்திப்பின்போது இந்திய பசிபிக் பாதுகாப்பு பிராந்தியத்தின் நலன்கள் விவாதிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் தனியாக சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்படவில்லை.

இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே கூறும்போது, “பல்வேறு இரு தரப்பு சந்திப்புகளுக்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இரு தரப்பு தலைவர்களின் சந்திப்பு, அவர்களின் நேர அட்டவணை அமைவதைப் பொறுத்துத்தான் அமையும்” என குறிப்பிட்டார்.

இருப்பினும் சீன அதிபர் ஜின் பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கடந்த 7 மாதங்களில் இவ்விரு தலைவர்களும் சந்தித்து பேசுவது இது 4-வது முறை ஆகும்.

ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், அர்ஜென்டினா அதிபர் மொரிசியோ மேக்ரி, சிலி அதிபர் செபாஸ்டியன் பினரா, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


Next Story