‘ஜி-20’ உச்சி மாநாட்டில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு - பொருளாதார குற்றவாளிகளை பிடிக்க 9 அம்ச திட்டம்


‘ஜி-20’ உச்சி மாநாட்டில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு - பொருளாதார குற்றவாளிகளை பிடிக்க 9 அம்ச திட்டம்
x
தினத்தந்தி 1 Dec 2018 11:30 PM GMT (Updated: 1 Dec 2018 10:27 PM GMT)

‘ஜி-20’ உச்சி மாநாட்டில், அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். தப்பி ஓடுகிற பொருளாதார குற்றவாளிகளை பிடிப்பது தொடர்பாக அவர் 9 அம்ச திட்டம் ஒன்றை தாக்கல் செய்தார்.

பியுனோஸ் அயர்ஸ்,

அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியுனோஸ் அயர்ஸில் ‘ஜி-20’ உச்சி மாநாடு நடந்தது.

இந்த மாநாட்டின் இடையே பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகிய 3 தலைவர்களும் ஒன்றாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பு நல்ல முறையில், நட்புரீதியில் அமைந்தது என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியும் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “எங்கள் தொடர்பினை மேலும் வலுப்படுத்துவது, கடல்பாதுகாப்பில் ஒத்துழைப்பது, இந்திய- பசிபிக் விவகாரத்தில் ஒரு நிலைத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி, ஜப்பான் பிரதமர் ஆகியோருடன் நல்ல பயனுள்ள பேச்சு வார்த்தை நடத்தினேன். 3 நாடுகளுக்கும் இது ஒரு மிக நல்ல நிகழ்வு. நாங்கள் உலக அமைதிக்காகவும், வளத்துக்காகவும், ஸ்திரத்தன்மைக்காகவும் மிகப்பெரிய அளவில் தொடர்ந்து பங்காற்றுவோம்” என கூறி உள்ளார்.

இந்த முத்தரப்பு கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிடும்போது, “எங்கள் 3 நாடுகள் இடையேயான உறவு மிகவும் நன்றாகவும், வலுவானதாகவும் உள்ளது. இந்தியாவுடனான உறவு இதுவரை இல்லாத அளவுக்கு நன்றாக இருக்கிறது. நாங்கள் ஒன்றாகவும், நன்றாகவும் செயல்படுகிறோம்” என பெருமிதத்துடன் கூறினார்.

இந்த மாநாட்டின் இடையே, 12 ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகிய 3 தலைவர்களும் ஒன்றாக சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதுபற்றி பிரதமர் மோடி கூறுகையில், “நானும், ரஷிய அதிபர் புதினும், சீன அதிபர் ஜின்பிங்கும் 3 நாடுகள் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான பேச்சு வார்த்தை நடத்தினோம். இந்த சந்திப்பு மிகச்சிறப்பான ஒன்றாக அமைந்தது” என்று குறிப்பிட்டார்.

சர்வதேச அமைப்புகளில் இந்தியா, ரஷியா, சீனா ஆகிய 3 நாடுகளும், பரஸ்பர ஒத்துழைப்பு வலுப்படுத்துவது பற்றி 3 தலைவர்களும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச வர்த்தகம், நிதி, வரி அமைப்புகள் தொடர்பான அமர்வில், பொருளாதார குற்றங்களை செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுகிற குற்றவாளிகளை பிடிப்பது தொடர்பாக 9 அம்சங்கள் கொண்ட திட்டம் ஒன்றை தாக்கல் செய்தார்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* பொருளாதார குற்றங்களை செய்து விட்டு தப்பி ஓடுகிற குற்றவாளிகளை பிடிப்பதற்கு ஜி-20 நாடுகள் வலுவான, செயல்படத்தக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

* பொருளாதார குற்றவாளிகள் தங்கள் நாடுகளில் நுழைவதை தடை செய்யவும், அடைக்கலம் தராமல் இருக்கவும் ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும்.

* பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை கண்டறிவதற்கான பணியை தொடங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

* பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்கவும், அவர்களை விரைவாக சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கவும் தேவையான சட்ட நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

* பொருளாதார குற்றவாளிகள் தொடர்பாக உரிய நேரத்தில், முழுமையான தகவல் பரிமாற்றத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இது தொடர்பாக சிறப்பு நிதி நடவடிக்கை பணிக்குழு ஏற்படுத்தப்பட வேண்டும். அந்தக்குழு பொருளாதார குற்றவாளிகள் என்பதற்கான இலக்கணத்தை வகுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். வேகமாக மாறிவரும் உலகில் பன்முகத்தன்மையின் முக்கியத்துவம் குறித்தும், பயங்கரவாதத்துக்கு எதிரான நல்லுறவை வலுப்படுத்துதல் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.

அதேபோல ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜூன்- கிளாடு ஜங்கெர், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொ னால்டு டஸ்க் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசியதாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story